சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மரக்காணம் இளைஞர் கைது

சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மரக்காணம் இளைஞர் கைது
Updated on
1 min read

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து விவாதப் பொருளாக மாறியது. தற்போது, அவர் ‘சூரரைப்போற்று’ என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்தப் படத்தை ‘ஓடிடி’ தளத்தில் வெளியிட முடிவுசெய்து அதற்கான பணியில்சூர்யா ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்’ எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சென்று ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்தது யார் என்பதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார்உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த இளைஞர் புவனேஷ் (20) என்பவர்தான் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், ஏற்கெனவே முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினி உட்பட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கியவர் எனவும் தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்தசூர்யாவின் அலுவலகம், 6 மாதத்துக்கு முன்பே அடையாறுக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in