Published : 28 Sep 2020 08:30 PM
Last Updated : 28 Sep 2020 08:30 PM
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செயல் அலுவலர்கள் நியமன உத்தரவு இல்லாமல் நியமிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை நிர்வகிக்க அறநிலையத்துறைச் சட்டத்தின் கீழ் ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அதேபோல, கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பதற்காக செயல் அலுவலர்களை, அறநிலையத்துறை ஆணையர் நியமிக்க, அறநிலையத்துறைச் சட்டம் வகை செய்கிறது. செயல் அலுவலர்கள் நியமனத்துக்குப் பல்வேறு நடைமுறைகள் உள்ளன.
ஆனால், பல கோயில்களில் முறையான நியமன உத்தரவு இல்லாமல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சட்டவிரோதமாகவும், அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு முரணாகவும் பதவியில் நீடித்து வருவதாகவும் கூறி, தனியார் அறக்கட்டளைத் தலைவர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களின் பட்டியலை, நியமன உத்தரவுடன் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். நியமன உத்தரவு இல்லாமல் செயல் அலுவலர்களாகப் பணியில் நீடிக்கும் செயல் அலுவலர்களிடம் உள்ள கோயில் நிர்வாகத்தை, அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு குறித்து விளக்கமளிக்க அறநிலையத்துறைச் செயலாளர் மற்றும் ஆணையருக்கு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT