Published : 28 Sep 2020 07:47 PM
Last Updated : 28 Sep 2020 07:47 PM

அக்.15-க்குள் சொத்து வரி செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்; தவறினால் 2% தண்டத்தொகை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை

சொத்து வரியைச் சரியான காலத்திற்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகையைப் பெறலாம் எனவும், தவறும்பட்சத்தில் ஆண்டுக்கு 2% தண்டத்தொகையுடன் செலுத்த நேரிடும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 104-ன்படி, சொத்தின் உரிமையாளர்களால், அந்தந்த அரையாண்டு தொடங்கிய முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரியானது பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்தப்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-க்கு அரசால் தமிழ்நாடு சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்கள் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. ஜூலை 16/ 2018 ஆம் ஆண்டு நாளிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, இச்சட்டத் திருத்தம் அரசாணையின்படி, அக்டோபர் 01/ 2019 தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு அதிகாரி மன்றத் தீர்மானம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசால் வெளியிடப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள், சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு, அதாவது முதல் அரையாண்டு தொடக்கக் காலமான ஏப்ரல் 1 முதல் 15 ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்கக் காலமான அக்டோபர் 1 முதல் 15 ஆம் தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டிய சொத்து வரித் தொகை செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய நிகர சொத்து வரித் தொகையுடன் (கல்வி வரி, நூலகத் தீர்வைத் தவிர்த்து) கூடுதலாக ஆண்டிற்கு இரண்டு சதவீதம் மிகாமல் தனி வட்டியுடன் தண்டத்தொகையாக விதித்து வசூலிக்கப்படும்.

* சொத்து உரிமையாளரால் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், வரி விதிப்பு மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் விளைவாக, மாநகராட்சிக்கு உரிய நிலுவைத்தொகை ஏதேனும் செலுத்தப்பட வேண்டியிருப்பின், ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து தினங்களுக்குள், நிர்ணயிக்கப்பட்ட தொகையினைச் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து (கல்வி வரி, நூலகத் தீர்வைத் தவிர்த்து) ஆண்டிற்கு இரண்டு சதவீதம் தனி வட்டியுடன் செலுத்தப்பட வேண்டும்.

* பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள், அதாவது முதல் அரையாண்டு தொடக்கக் காலமான ஏப்ரல் 1 முதல் 15 ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்கக் காலமான அக்டோபர் 1 முதல் 15 ஆம் தேதிக்குள்ளும், செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி தொகையினைச் செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு, செலுத்தப்படும் நிகர சொத்து வரியில் (கல்வி வரி, நூலகத் தீர்வைத் தவிர்த்து) ஐந்து சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5000/-வரை) ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேற்படி சட்டத் திருத்தம் தொடர்பான விவரம், அரசிதழ்/ உள்ளூர் நாளிதழில் அறிவிக்கையாக (Notification) வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919க்கு, அரசால் வெளியிடப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது முதல் அரையாண்டு தொடக்கக் காலமான ஏப்ரல் 1 முதல் 15 ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்கக் காலமான அக்டோபர் 1 முதல் 15 ஆம் தேதிக்குள்ளும் உரிய வழிமுறைகளின்படி செலுத்தி, ஐந்து சதவீத ஊக்கத்தொகை பெற்றிடலாம்.

மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து வரி செலுத்தத் தவறும் பட்சத்தில், விதிகளின்படி செலுத்த வேண்டிய தொகைக்கு, ஆண்டிற்கு இரண்டு சதவீதம் தண்டத்தொகையுடன் செலுத்த நேரிடும். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினைச் செலுத்திடுமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x