Published : 28 Sep 2020 06:28 PM
Last Updated : 28 Sep 2020 06:28 PM
தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பது உறுதி. அடுத்த 6 மாதங்களில் அதிமுக கூடாரம் காலியாகும் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக தனது தோழமைக் கட்சிகளுடன் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைத் துறைத் தலைவர் அஸ்லாம்பாஷா முன்னிலை வகித்தார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
''நாடு முழுவதும் வேளாண் சட்ட மசோதாவுக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் விவசாயத் தொழில் மிக முக்கியமானதாகும். விவசாயத் தொழிலை நம்பிக் கூட்டுறவு வங்கி முதல் பல்வேறு வங்களில் விவசாயிகள் கடன் பெற்று பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இதற்கு மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மட்டுமே வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமார், தான் ஒரு விவசாயி எனக்கூறிவிட்டு விவசாயிகளுக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்து வாக்கு அளித்துள்ளார். அதிமுக எம்.பி. இரட்டை வேடம் போடுகிறார்.
பல எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை அவசர, அவசரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட மசோதாவில் குடியரசுத் தலைவர் கையெழுத்திடக் கூடாது, ஆலோசனைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்ட மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தாமல், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரித்து, வரும் 30-ம் தேதி வரை நாடாளுமன்றம் நடைபெறும் என அறிவித்துவிட்டு தற்போது அவசர, அவசரமாக வேளாண் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டித்தக்கது. இந்த சட்ட மசோதாக்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கும்''.
இவ்வாறு கதிர் ஆனந்த் பேசினார்.
இதைத் தொடர்ந்து, சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆன பிறகு அதிமுகவில் ஏற்படும் மாற்றம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''மற்றவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அதிமுக கூடாரம் அடுத்த 6 மாதங்களில் காலியாகும். தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்'' என்று கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
இதேபோல, நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர் பகுதிகளிலும் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக தன் கூட்டணிக் கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT