Published : 28 Sep 2020 05:52 PM
Last Updated : 28 Sep 2020 05:52 PM

குளிர் காலத்திலும் மல்லிகை விளைச்சலை அதிகரிக்க என்ன செய்யலாம்?- விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுரை

மதுரை

மல்லிகை விளைச்சலை ஆஃப் சீஸனான குளிர் காலத்திலும் அதிகரிக்க விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி வட்டாரங்களில் அதிகளவு மல்லிகைச் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

மதுரை மல்லிகையின் மனமும், நிறமும், தமிழகத்தில் வேறு எங்கும் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில் கண்டறிய முடியாது. அதனால், உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை மதுரை மல்லிகைக்கு நிரந்தரமாக வரவேற்பு உண்டு.

பொதுவாக மல்லிகை உற்பத்தி சீசன், பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். இந்த சீசனில் மல்லிகைப்பூக்கள் அதிகளவு சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும்.

இந்த சீசனில் உற்பத்தி மிகுதியால் விவசாயிகளுக்கு பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த ஆண்டு கரோனா தொற்று நோயும் சேர்ந்து கொண்டதால் உற்பத்தி செய்த மல்லிகைப்பூக்களை வாங்க ஆளில்லாமல் விவசாயிகள் பெரும் நஷ்மடைந்தனர்.

இந்நிலையில் தற்போது குளிர் காலம் தொடங்கும் ஆஃப் சீசனில் மல்லிகை சாகுபடியில் பெரியளவில் பூக்கள் உற்பத்தியாகாது. ஆனால், உற்பத்தி குறைவால் இந்த ஆஃப் சீசனில் பூக்களுக்கு நல்ல மவுசும், விலையும் கிடைக்கும்.

இதுகுறித்து மதுரை வேளாண் அறிவியல் தொழில்நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வல்லுநர்கள் கிருஷ்ணகுமார், பழனிக்குமார் ஆகியோர் கூறியதாவது:

குளிர்காலத்தில் மல்லிகைப்பூ செடிகளை கவாத்து செய்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குளிர்காலங்களில் கூட மல்லிகைப்பூ உற்பத்தியை அதிகரிக்கலாம்.

குளிர்காலங்களில் மல்லிகை பூ விலையானது மும்மடங்கு அதிகரிப்பதால் விவசாயிகள் அதிகம் லாபம் ஈட்டலாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தரையிலிருந்து 45 செ.மீ., உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும்.

கவாத்து செய்த வெட்டுப்பகுதிகளில் பைட்டலான் பூஞ்சாணக் கொல்லியை தடவி பூஞ்சாணத்தாக்குதலை கட்டுப்படுத்தலாம். கவாத்து செய்யும்போது குறுக்குக்கிளைகள், நோய் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகள், மெலிந்த சிறிய கிளைகள் ஆகிவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

செடிகளை நன்கு சூரிய ஒளி படுமாறு செய்ய வேண்டும். கவாத்து செய்தவுடன் தொழுஉரம் 10 கிலோவுடன் 30;60;60 கிராம் தழை, மணி, சாம்பல்சத்து அதாவது, 65 கிராம், யூரியா 375 கிராம், பொட்டாஷ் 100 கிராம் என்ற அளவில் ஒவ்வொரு செடிகளுக்கும் அதன் மையப்பகுதிகளில் இருந்து 1 1/2 அடி அளவிற்கு தள்ளி 1/2 அடி ஆழம் குழி பறித்து மண்ணில் இட்டு உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

ஒவ்வொரு செடிக்கு 500 கிராம் வெப்பம் பிண்ணாக்கு இடுவதின் மூலம் நூற்புழுக்கள் தாக்கா வண்ணம் செய்யலாம். கவாத்து செய்து ஒரு மாதம் கழித்து 10 மில்லி சைகோசெல் மற்றும் 4 மி.லி ஹூமிக் அமிலத்தை 10 லிட்டர் தண்ணிரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதை செய்தால் நவம்பர், டிசம்பரில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x