Published : 28 Sep 2020 03:52 PM
Last Updated : 28 Sep 2020 03:52 PM
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து பேசி முடிவெடுத்து வரும் அக்.7 அன்று கூட்டாக அறிவிப்பார்கள் எனச் செயற்குழு முடிவெடுத்துள்ளதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமீபத்தில் நடந்த அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்தன.
முதல்வர் வேட்பாளர், கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு மற்றும் சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அலசப்பட்டது.
இதையடுத்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, செப்.28-ம் தேதி செயற்குழுக் கூட்டத்தை நடத்துவது என அறிவிக்கப்பட்டது. செயற்குழு என்பது பொதுக்குழுவுக்கு முந்தைய பெரிய அளவிலான கட்சிக்கு உள்ளடங்கிய அமைப்பு ஆகும், ஆகவே செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதன்படி இன்று செயற்குழு கூடியது. காலை 10 மணிக்குக் கூடிய செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
5 மணி நேரம் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடந்தது. இறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் அக்.7-ம் தேதிக்கு வேட்பாளர் சர்ச்சை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவெடுப்பது குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் வசம் செயற்குழு ஒப்படைத்துள்ளது.
செயற்குழு முடிவு குறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“இன்று காலை 10 மணி அளவில் செயற்குழு கூடியது. செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக தலைமையில் இயங்கக்கூடிய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் வரும் அக்.7- ம் தேதி அன்று இணைந்து பேசி அறிவிப்பார்கள்”.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT