Last Updated : 28 Sep, 2020 02:40 PM

 

Published : 28 Sep 2020 02:40 PM
Last Updated : 28 Sep 2020 02:40 PM

விவசாயிகளுக்காக ஆட்சியை இழப்பது உட்பட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

புதுச்சேரி

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்காக புதுவை காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்தால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். விவசாயிகளுக்காக எந்தத் தியாகமும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பாரதிய ஜனதா அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் 3 புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம், புதுவையில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுவையில் முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் தலைவராக உள்ள முதல்வர் நாராயணசாமியே கரோனா பரவல் காலத்தில் இதுபோன்ற போராட்டங்களை அறிவிப்பது மேலும் நோய்த் தொற்றைப் பரவச் செய்யும் என அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து ஆளுநர் கிரண்பேடியிடம் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அன்பழகன் மனுவும் அளித்தார்.

இதனையடுத்து ஆளுநர் கிரண்பேடி, இதுபோன்ற போராட்டங்களால் கரோனாவுக்கு எதிரான போரின் வீரியம் குறையும் என்றும், முதல்வரே இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது சட்டப்படி தவறு என்பதால் போராட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமிக்குக் கடிதம் அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி உள்துறை அமைச்சருக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லி சென்று திரும்பிய முதல்வர் நாராயணசாமி போராட்டத்தை உறுதி செய்தார். திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதன்படி இன்று காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், படைப்பாளி மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்கள் இணைந்து இன்று புதுவையில் 7 மையங்களில் போராட்டங்களை நடத்தின.

புதுவை தலைமைத் தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:

''ஆர்ப்பாட்டத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா அரசு 3 சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்துச் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என மனு அளித்தனர். அதையும் மீறி அவசர, அவசரமாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களில் போராட்டம் நடக்கிறது.

இந்தச் சட்டத்தைக் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாட்டைக் கார்ப்பரேட்டுகளிடம் அடகுவைக்கும் வகையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி விட்டனர். தொழிலாளர் சட்டங்களிலும் கை வைத்துள்ளனர். இதனால் மக்கள் விரோத மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்க்க அனைவரும் தயாராக வேண்டும்.

எனக்கு ஆளுநர் கிரண்பேடி போராட்டம் தொடர்பாகக் கடிதம் அனுப்பினார். முதலில் நான் ஒரு கட்சிக்குத் தொண்டன், அதன் பின்னர்தான் முதல்வர். பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடம் வேண்டாம். பஞ்சாப்பில் நடக்கும் மறியல் போராட்டத்தில் மாநில முதல்வர் பங்கேற்றுள்ளார். போராட்டத்திற்காகப் புதுவை காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்தால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

விவசாயிகளுக்காக எந்தத் தியாகமும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இது ஆரம்பம்தான். இன்னும் கிராமம், கிராமமாகச் செல்வோம். காலம் தாழ்ந்துவிடவில்லை. விவசாயிகளை வஞ்சிக்கும் இந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்''.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x