Published : 28 Sep 2020 12:31 PM
Last Updated : 28 Sep 2020 12:31 PM
மத்திய அரசு வேளாண் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோவில்பட்டி இனாம் மனியாச்சியில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்டம் பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார்.
பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, "விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்துப் பேசிய நிலையில், விவசாயிகளும் போராடி வரும் சூழலில் நாடே தீப்பற்றி எரியும்போது பிடிவாதமாக இந்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதனைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போராட்டம் தொடரும். விவசாயிகளுக்கு எதிரான இந்தத் திட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இல்லையென்றால் விவசாயிகள் கேட்கும் பாதுகாப்புகளை இந்த சட்டத்துக்குள் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், இது ஆன்லைன் வர்த்தகத்துக்கு உதவியாகவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமையாக்கக் கூடியதாகவும் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் பொது விநியோக முறையையே அழித்துவிடக் கூடிய வகையிலும், நுகர்வோருக்கு எதிரான வகையிலும் உள்ளது.
இந்தச் சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு விவசாயிகள் மீது திணிக்கக்கூடாது.
இந்தச் சட்டத்தை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்க்கின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டுள்ளது.
சட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு சென்று இதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை விளக்குவதற்கான களமாக தான் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT