Published : 28 Sep 2020 11:59 AM
Last Updated : 28 Sep 2020 11:59 AM
வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதுரையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இருப்பினும், வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பும்படியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் அளித்தன.
ஆனால், எதிர்ப்புகளை மீறியும் இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். தொடர்ந்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.இது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று (செப்.28) போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றுள்ளன.
மதுரை வடக்கு மாவட்டத்தில் எம்எல்ஏ மூர்த்தி தலைமையிலும், தெற்கு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையிலும் மதுரை நகர்ப்புறத்தில் கோ.தளபதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை முழுவதும் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மேலூரில் எம்எல்ஏ மூர்த்தி தலைமையில் திரண்ட திமுகவினர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல், பாலமேடு பேரூர் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பாக ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட துனை அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பாலமேடு துனை சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.கே.பிரபு, பேரூர் கழக பொறுப்பாளர்கள், தகவல் தொழில்அணி அமைப்பாளர் விஜய் மற்றும் கழக உறுப்பினர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT