Published : 28 Sep 2020 09:40 AM
Last Updated : 28 Sep 2020 09:40 AM
மதுரை-தூத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் திருப்பரங்குன்றம்-மேலமருதூர் இடையே நிலம் கையகப்படுத்துவது தாமதமா வதால் பணிகள் முடங்கியுள்ளன.
மதுரை-தூத்துக்குடி இடையே தற்போதுள்ள 159 கி.மீ. நீள ரயில் பாதை நெல்லை வழித்தடத்தில் வாஞ்சி மணியாச்சி வரை சென்று அங்கிருந்து மீளவிட்டான் வழியாக தூத்துக்குடியை அடையும் வகை யில் உள்ளது. இதனால் பேருந்துகளில் செல்வதைவிட ரயில் பயணம் ஒரு மணி நேரம் கூடுதலாகிறது. மேலும் இப் பாதையில் கிராசிங் நேரமும் அதிகம்.
எனவே பயண நேரத்தை குறைக்கவும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கான வசதியை மேம்படுத்தும் வகையிலும் அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து 1999-2000-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் மதுரை-தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை, விளாத்தி குளம், புதூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம், பாறைப்பட்டி, ஆவியூர், காரியாபட்டி, கல் குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப் பாறை, மீளவிட்டான் வழியாகத் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை சுமார் 143 கி.மீ.க்கு அகல ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது.
இத்திட்டத்துக்காக தனியார் நிறுவனப் பங்களிப்புடன் சுமார் ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணியை ரயில்வே துறையின் ரயில்வே விகாஷ் நிகான் லிமிடெட் (ஆர்விஎன்எல்) நிறுவனம் மேற்கொள்கிறது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த இப்பணியில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை அகல பாதை அமைக்கும் பணி நடக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த வழித்தடத்தில் விளாத்திகுளம், குளத்தூர், நாகலாபுரம், புதூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் அப்பகுதி மானா வாரி நிலங்களில் விளையும் மக்காச்சோளம், மிளகாய் வத்தல், மல்லி போன்ற விளை பொருட்களை விவசாயிகள், வணிகர்கள் வெளியூர்களுக்குக் கொண்டு செல்ல வசதியாக இருக்கும்’ என்றனர்.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: மீளவிட்டான்-மேலமருதூர் வரை பணிகள் வேகமாக நடக்கின்றன. அடுத்த ஆண்டுக்குள் 18 கி.மீ. தூரப் பணிகள் முடியும். மேலமருதூர்-அருப்புக்கோட்டை-திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. மதுரை-தூத்துக்குடி இடையேயான 143 கி.மீ. தூரத்தில் தூத்துக்குடி-மீளவிட்டான் வரை ஏற்கெனவே ரயில் பாதை உள்ளது. மீளவிட்டான்- திருப்பரங்குன்றம் வரை 134 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே புதிய பாதை அமைக்க வேண்டும். மதுரை- தூத்துக்குடி இடையே 10 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அருப்புக் கோட்டை இனி முக்கியச் சந்திப்பாக மாறும். நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த பிறகே பாதை அமைக்கும் பணி தொடங்கும். இந்த வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்துக்கான ரயில்களுடன் தேவையைப் பொறுத்து பயணிகளுக்கான ரயில் களும் இயக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT