Published : 28 Sep 2020 09:05 AM
Last Updated : 28 Sep 2020 09:05 AM
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த வாரம் இளநிலை உதவியாளர் பணி நியமனத்துக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதில் ராமநாதபுரம் மாவட்டக் கல்வித் துறைக்கு 43 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 இடங்களுக்கு ஆணை பெற்றவர்கள் இன்னும் பணியில் சேரவில்லை.
இந்நிலையில் கடலாடி அருகே சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்கெனவே ஒரு பெண் பணியில் சேர்ந்த நிலையில், அப்பள்ளியில் கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை வலம்புரி நகரைச் சேர்ந்த ராஜேஷ்(32) என்பவர் போலி ஆணையைக் கொடுத்து பணியில் சேர முயன்றார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி தந்த புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் ராஜேஷை நேற்று கைது செய்தனர்.
போலி ஆணை தயாரித்து தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் கண்ணன்(47) என்பவரையும் கைது செய்தனர். ராஜேஷை போன்று மேலும் 3 பேர் வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் போலி ஆணை மூலம் பணியில் சேர்ந்துள்ளதும் தெரியவந்தது.
அதன்படி, பாம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்த பரமக்குடி கலைவாணன்(26), ராமேசுவரம் கரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்த பரமக்குடி சதீஷ்குமார்(33) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கும், கண்ணனுக்கும் இடைத்தரகராகச் செயல்பட்ட பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் எஸ்.காவனூரைச் சேர்ந்த கேசவன்(45) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.மனோஜ்குமார் என்பவரைத் போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT