Published : 28 Sep 2020 09:02 AM
Last Updated : 28 Sep 2020 09:02 AM
‘‘அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றதற்கும், அதிமுக செயற்குழு கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.துறை ரீதியாக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்’’ என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
சசிகலா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாவார் என்றும், அதன் பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் திடீரென தனி விமானத்தில்டெல்லி சென்றார். மேலும், இன்று சென்னையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோரை இருவரும் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்த குளறுபடியும் இல்லை. 10-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்பு வரை உள்ளமாணவர்கள் ஆன்லைனில் படிக்கும் போது, ஆசிரியர்களிடம் நேரடியாக விளக்கம் தேவைப்பட்டால் பள்ளிக்குச் செல்லலாம். கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கவில்லை. பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக மணிமண்டபம் கட்டுவது, பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட சிறப்புகள் செய்வது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றதற்கும், அதிமுக செயற்குழுகூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. துறை ரீதியாக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பது வழக்கம். இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT