Published : 28 Sep 2020 08:49 AM
Last Updated : 28 Sep 2020 08:49 AM
புரட்டாசி திருவோண நட்சத்திர தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகர் சாற்றுமுறை வைபவம் நேற்று நடைபெற்றது
காஞ்சிபுரம் நகரில் தூப்புல் பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் விளக்கொளி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருகே ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதில், 9-ம் நாள் தேசிகர் அவதார உற்சவத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் மூலவர் சந்நிதியில், தேசிகர் எழுந்தருளியதும், பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் நடைபெறும்.
இக்கோயிலில் செப்.18-ம் தேதி உற்சவம் தொடங்கியது. கரோனா அச்சம் காரணமாக உற்சவம் தொடங்கிய நாள்முதல் சுவாமி ஊர்வலம் இன்றி கோயிலின் உள்ளே எளிமையாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் அவதார உற்சவ வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீ வேதாந்த தேசிகர், வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருள வேண்டும். ஆண்டுதோறும் தவறாமல் நடைபெறும் இந்த உற்சவம் இந்த ஆண்டு தடைபடும் நிலை ஏற்பட்டது.
தங்கப் பல்லக்கில்..
ஆனால், பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெறும் உற்சவத்தின் அவசியம் கருதி இந்து சமய அறநிலையத் துறைசார்பில், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதிபெற்று, அதிகாலை 4 மணிக்கு தங்கப் பல்லக்கில் ஸ்ரீ வேதாந்த தேசிகர், வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.
மூலவர் சந்நிதியில் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் முன்னிலையில், பட்டாச்சாரியார்கள் சாற்றுமுறை மற்றும் பாசுரங்களைப் பாடி, மங்களாசாசனம் செய்தனர். இதில், 25 பேர் மட்டுமே பங்கேற்றனர். கோயில்களின் நகரமாகக் கருதப்படும் காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 6 மாதங்களாக சுவாமி ஊர்வலங்கள் நடைபெறாமல் இருந்தநிலையில், தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகர் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா சென்றது பக்தர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT