Published : 27 Sep 2020 09:01 PM
Last Updated : 27 Sep 2020 09:01 PM
கரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கரோனா பயன்படுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்ட திமுக சார்பில், காணொலிக் காட்சி வாயிலாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கட்சியின் முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழி வழங்கினார்.
முப்பெரும் விழாவில் ஸ்டாலின் ஆற்றிய உரை:
''கரோனா கால ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, தினமும் காலையும் மாலையும் காணொலி மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொண்டர்களை, நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடிக் கொண்டே இருக்கிறேன்.
எந்தச் சூழலிலும் நம்மால் கட்சிப் பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகவே இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
இது தொழில்நுட்ப யுகம். அதனால்தான், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூடியூப் மூலமாக நமது கொள்கைகளைப் பரப்பக்கூடிய பணியைச் செய்துகொண்டு வருகிறோம். இப்போது காணொலிகள் மூலமாகவும் ஒன்றிணைந்து நாம் நமது பிரச்சாரத்தைச் செய்து வருகிறோம். நாளைக்கு வேறொரு தொழில்நுட்பம் வந்தால் அதனையும் பயன்படுத்திக் கொள்வோம்.
என்ன சொல்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர - எதன் மூலம் சொல்கிறோம் என்பது முக்கியமல்ல. எமர்ஜென்சி காலமாக இருந்தாலும் - கரோனா காலமாக இருந்தாலும் - நமது போராட்டங்கள் நடக்கும், நமது நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கரூர் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாளைய தினம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். மண்ணைக் காப்பாற்றுவதற்கு, மக்களைக் காப்பாற்றுவதற்கு, விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கு, வேளாண்மையைக் காப்பாற்றுவதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இந்தியா விவசாய நாடு; இந்தியாவே கிராமங்களில்தான் வாழ்கிறது என்று சொல்கிறோம். ஆனால் ஒரு விவசாய நாடு போடுகிற சட்டமானது விவசாயிகளுக்கு விரோதமாக, வேளாண்மையைச் சிதைப்பதாக இருக்கும் என்று யாரும் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் குறித்து திமுக சார்பில் அவசர அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. ஏனென்றால், இது மிக முக்கியமான பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வரும் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் - மத்திய பாஜக அரசின் விவசாய விரோத சட்டத்துக்குத் தலையாட்டிய எடப்பாடி அரசைக் கண்டித்தும் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாங்கள் மட்டுமல்ல; பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் இந்தச் சட்டங்களை எதிர்த்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரே விலகி உள்ளார். இதை விட மிகப்பெரிய எதிர்ப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். தான் ஆதரிக்கிறது மட்டுமில்லாமல்; மற்றவர்களையும் ஆதரிக்கச் சொல்கிறார். “நானும் விவசாயி, நானும் விவசாயிதான்” என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர; விவசாயியாக நடந்துகொள்ளவில்லை!
விவசாயிகள் விரோதச் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதைவிட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா?
பச்சைத் துண்டு போட்டு நடித்தவரின் பச்சைத் துரோகம் இது! இந்தத் துரோகச் சட்டத்தை ஆதரித்ததால்தான், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுகிறார். கரோனாவை முதல்வர் பழனிசாமி கட்டுப்படுத்திவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்.
மாநில உரிமைகளுக்காகப் போராடாத தலையாட்டிப் பொம்மையாக பழனிசாமி இருப்பதால்தான் பிரதமர் மோடி அவரைப் பாராட்டுகிறார்.
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று ஐந்து மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எடப்பாடி அரசு அதைச் செய்யவே இல்லை. ஊரடங்கு இருந்தால்தானே இழப்பீடு கேட்பீர்கள், இதோ ஊரடங்கையே தளர்த்திவிட்டோம் என்று சொல்லி அனைத்துக்கும் திறப்புவிழா நடத்திவிட்டார்கள்.
அனைத்தையும் திறந்து வைத்துவிட்டு, அதை ஊரடங்கு காலம் என்று சொல்வதை மாதிரிக் கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், கரோனாவை வைத்து அடிக்கும் கொள்ளைகள் குறையவில்லை.
கரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கரோனா பயன்படுகிறது. இந்த அமைச்சரவையை ‘கிரிமினல் கேபினெட்’ என்று நான் குற்றம் சாட்டினேன். அத்தகைய குற்றங்கள் அதிகம் ஆகியிருக்கிறதே தவிர குறையவில்லை. இந்த கிரிமினல் கேபினெட்டை, கோட்டையை விட்டு துரத்தி சிறையில் வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள்!
இந்த ஆட்சியில் மொத்த மக்களும் நிம்மதியாக இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நெசவாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தொழிலாளிகள் வேலைகளை இழக்கிறார்கள். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் இல்லை. சிறு, குறு தொழில்கள் மொத்தமாக நசிந்துவிட்டன. மத்திய தர வர்க்கம் விரக்தியாகி விட்டது. தொழில் அதிபர்களுக்கும் தொழில் முன்னேற்றம் இல்லை. விலைவாசி அதிகமாகி விட்டது. எல்லாக் கட்டணங்களும் உயர்ந்துவிட்டன. சலுகைகள், மானியங்களைத் துண்டித்துவிட்டார்கள். பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துவிட்டது. மத்திய அரசு எல்லா வகையிலும் மக்களுக்கு சலுகைகளை தருவது இல்லை. மத்திய அரசுக்கு மக்களைப் பற்றி அக்கறையே இல்லை. மொத்தத்தில் அவர்கள், அவர்களுக்காக ஆண்டு கொள்கிறார்கள். அவர்கள், மக்களுக்காக ஆளவில்லை!
மக்களுக்காக, மக்களைப் பற்றி கவலைப்படக் கூடிய, மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய, மக்களது எதிர்பார்ப்பை செய்து கொடுக்கக் கூடிய ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். அதனை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாம் அதற்கான பணிகளைத் தொடங்குவோம்''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT