Published : 27 Sep 2020 07:31 PM
Last Updated : 27 Sep 2020 07:31 PM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்துள்ளார். நாளை (செப்.28) மாலை அவர் வீடு திரும்புவார் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பக்கரிப்பள்ளி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் மக்கள் வசித்து வரும் 42 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் சுமார் 8 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கரமித்து போலிப் பட்டா தயாரித்து விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று தேமுதிக சார்பில் தமிழக முதல்வர் தனிப்பிரிவு, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோரின் கவனத்துக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 8 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பக்கிரிப்பள்ளி கிராமத்தில் இன்று (செப்-27) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று வேலூர் வந்தார்.
அவரை மத்திய மாவட்டச்செயலாளர் ஸ்ரீதர், குடியாத்தம் நகரச்செயலாளர் ரமணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பிறகு, பக்கிரிப்பள்ளியில் மீட்கப்பட்ட 8 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை உரியவர்களிடம் எல்.கே.சுதீஷ் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். நாளை மாலை அவர் வீடு திரும்ப உள்ளார். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி விஜயகாந்த் யாருக்குமே கெடுதல் நினைத்தது இல்லை. எனவே, அவரது உடலுக்கு எந்தத் தீங்கும் வராது.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக 29 இடங்களைக் கைப்பற்றியது. வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முன்பைவிட அதிக இடங்களை தேமுதிக கைப்பற்றும். வரும் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை. டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் கட்சியின் செயற்குழுக்கூட்டம் கூட இருக்கிறது.
இக்கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவுகளை கட்சித் தலைமை அறிவிக்கும்''.
இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் சண்முகம், மாவட்ட இணைச்செயலாளர் புருசோத்தமன், காட்பாடி தொகுதி செயலாளர் சுரேஷ், குடியாத்தம் ஒன்றியச்செயலாளர் உமாகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT