Last Updated : 27 Sep, 2020 06:17 PM

1  

Published : 27 Sep 2020 06:17 PM
Last Updated : 27 Sep 2020 06:17 PM

பிறவி வளைபாத குறைபாட்டை அறுவை சிகிச்சை இல்லாமலே குணமாக்கும் கோவை அரசு மருத்துவமனை: இதுவரை 400 குழந்தைகளுக்கு வெற்றிகர சிகிச்சை

சிகிச்சைக்கு முன் உள்நோக்கி திரும்பிய நிலையில் இருந்த குழந்தையின் பாதம். (அடுத்த படம்) சிகிச்சைக்குப் பின் சீரான நிலையில் குழந்தையின் பாதம்

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 400 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய முறையில் பிறவி வளைபாத குறைபாடு முழுமையாகச் சரி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எதிர்காலத்தில் ஏற்படும் உடல் உறுப்பு செயலிழப்பைத் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பிறவி வளைபாதம் அல்லது பிறவிக் கோணல் அடிக்கால் (CLUBFOOT) என்பது ஒரு பிறவிக் குறைபாடாகும். இந்தப் பாதிப்போடு பிறந்தவர்களின் ஒரு பாதமோ அல்லது இரு பாதங்களோ பெரும்பாலும் உள்நோக்கித் திரும்பி இருக்கும். பாதிக்கப்பட்ட காலானது சாதாரண காலைவிடச் சிறியதாக இருக்கும். ஆயிரத்தில் ஒரு குழந்தையைப் பாதிக்கும் இந்தப் பிறவி வளைபாத குறைபாட்டைச் சரிசெய்ய, முன்பெல்லாம் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்ற நிலை இருந்தது. தற்போது எளிய முறையில் பாத வளைவானது அறுவை சிகிச்சை இல்லாமலேயே படிப்படியாகச் சரி செய்யப்பட்டு சீரான நிலைக்கு மாற்றப்படுகிறது.

அதன்படி, கோவை அரசு மருத்துவமனை முடநீக்கியல் துறையில் இதுவரை சுமார் 400 குழந்தைகளுக்குப் பிறவி வளைபாதம் சரிசெய்யப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மட்டும் 45 குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனையின் முட நீக்கியல், விபத்து கிசிச்சை துறை இயக்குநர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், "முடநீக்கியல் துறையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குழந்தைகளுக்கு பிறவி வளைபாதம் சரிசெய்யும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளின் பாதத்துக்கு வாரந்தோறும் மென்மையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, மாவுக்கட்டு போடப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகளின் பாத விரல்களில் ரத்த ஓட்டம் பரிசோதிக்கப்பட்டு பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகள் அளிக்கப்பட்ட பின்னரே வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஆரம்ப நிலையில் சிகிச்சை அவசியம்

சிகிச்சை முறைக்குப் பிறகு வளைபாதம் சீராக மாறிய பிறகும்கூட பழைய நிலைக்கு மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே, அதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு அலுமினியத்தால் செய்யப்பட்ட 'பாத விலகல் இறுக்கி' எனப்படும் பூட்ஸ் வழங்கப்படுகிறது. இதை மருத்துவர் குறிப்பிடும் காலம்வரை இரவு தூங்கும்போது குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும். பிறவிக் குறைபாடு என்பதால் குழந்தை பிறந்த ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெறுவது அவசியம். அவ்வாறு சிகிச்சை பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் குழந்தை மாற்றுத்திறனாளி ஆவதிலிருந்து தடுக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

ஓடி விளையாடும் குழந்தை

சிகிச்சையால் பயன்பெற்றது குறித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய் சுபாஹ் கூறும்போது, "ஆண் குழந்தையைப் பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சி மறைந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் இருந்தேன். கடந்த 4 ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையால் தற்போது என் மகன் மற்ற குழந்தைகளைப் போல ஓடி விளையாடுகிறான். இதனால் இத்தனை ஆண்டுகள் அனுபவித்த வேதனை மறைந்துபோனது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x