Published : 27 Sep 2020 12:57 PM
Last Updated : 27 Sep 2020 12:57 PM

ஜஸ்வந்த் சிங் மறைவு: முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

ஜஸ்வந்த் சிங்: கோப்புப்படம்

சென்னை

பாஜக மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங், வாஜ்பாய் அரசில் பல்வேறு அமைச்சகப் பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளால் ராணுவ மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் உடல்நலக் குறைவால் ஜஸ்வந்த் சிங் பாதிக்கப்பட்டு ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (செப். 27) காலை மாரடைப்பு ஏற்பட்டு ஜஸ்வந்த் சிங் காலமானார்.

இவரது மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவையறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர் சிறந்த நிர்வாகியாக இருந்தார். ஜெயலலிதாவுடனான அவரது பிணைப்பை நினைவுகூர்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த அரசியல் தலைவருமான ஜஸ்வந்த் சிங், இன்று மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், வெளியுறவுத்துறை, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சராகவும் பொதுப்பணி ஆற்றியவர்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான ஜஸ்வந்த் சிங், மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய துயர்மிகு நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருக்கிறது.

வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக

முன்னாள் மத்திய அமைச்சரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான ஜஸ்வந்த் சிங் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்களவையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். ஆணித்தரமான ஆதாரங்களோடு வாதங்களை எடுத்து வைப்பார். நான் அவரோடு மிகச் சிறந்த நட்பு கொண்டிருந்தேன். அவர் இந்தியக் கடற்படையில் சிறப்பாகப் பணியாற்றியவர். குளியல் அறையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு, கடந்த சில ஆண்டுகளாகவே சுயநினைவு இன்றி இல்லத்தில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

நான் டெல்லி செல்லும்போதெல்லாம் அவரது வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து வந்தேன். அவருடைய மறைவு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், இந்தியப் பொதுவாழ்வுக்கும் இழப்பாகும்.

அவரது மறைவால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சு.திருநாவுக்கரசர், மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்

பாஜகவின் மூத்த தலைவரும் வாஜ்பாய் அமைச்சரவையில் மூத்த அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து வருந்துகிறேன். ஜஸ்வந்த் சிங் சிறந்த அரசியல் தலைவர், நல்ல பண்பாளர்.

தமிழகத்தில் சுனாமி பேரலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழகத்திற்கு வருகை தந்து வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினார். வாஜ்பாயின் உற்ற நண்பர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது மகன், குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ், நிறுவனர், பாமக

வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அரசியலில் மிகவும் நேர்மையானவர். வெளிப்படையானவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்!

இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x