Published : 27 Sep 2020 10:42 AM
Last Updated : 27 Sep 2020 10:42 AM
இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதால் வறட்சிக்கு இலக்கான நீர்நிலையாக வைகை ஆறு மாறி வருகிறது. இந்நிலையை மாற்ற அரசுத் துறைகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலைப் பகுதியில் உற்பத்தியாகி கம்பம் பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளைப் பல்லாயிரம் ஆண்டுகளாகச் செழிக்க வைத்தது வைகை ஆறு. இந்த ஆற்றின் கரையோரங்களில் ஏராளமான நகர நாகரிகங்கள் தோன்றி உள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கீழடி அகழாய்வில் பல சான்றுகள் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்களில் புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்ட இந்த ஆற்றின் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாக மாறியிருக்கிறது.
மணல் கொள்ளை, தண்ணீர்த் திருட்டு, கழிவுநீர் கலத்தல் உள்ளிட்ட செயல்களால் ஆற்றின் நீர்வழித் தடமும், தூய்மையும் கேள்விக்குறியாகி உள்ளது.
60 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட வைகையில் ஆண்டு முழுவதும் நீரோட்டம் இருந்துள்ளது. ஆனால், வைகை அணை கட்டப்பட்ட பின்னர் அணை மட்டுமின்றி இந்த ஆறு உற்பத்தியாகும் மேகமலை, வருஷநாடு போன்ற பகுதிகளும் வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றப்பட்டன. மேகமலையில் தனியார் எஸ்டேட்கள் அதிகரித்தன. மழைநீரைச் சேமித்துவைத்து சிறுகச் சிறுக வெளியேற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள், புல்வெளிகள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டன. அரசியல் பின்னணியில் இரவு, பகலாக லாரிகள், டிராக்டர்களில் டன் கணக்கில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. ஆற்று வழித்தடங்களில் மணல் முழுவதும் சுரண்டப்பட்டு பாறைகள் தெரியும் அளவுக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இப்படி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் தொடங்கி வழிநெடுகிலும் இயற்கை வளம் சூறையாடப்பட்டதால் 1990-ம் ஆண்டுகளில் வைகை ஆறு, வறட்சி யான ஆறாக மாறி விட்டது. வடகிழக்குப் பருவ மழையின்போது அதிக மழைப்பொழிவு இருந்தால் மட்டுமே ஆற்றில் தண்ணீர் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது:
ஆற்றின் நீரோட்டத்துக்கு ஆதாரமாக இருப்பது மணல். தண்ணீரைச் சேமித்து வைப்பதில் மணல் முக்கியப் பங்காற்றுகிறது. இந்நிலையில், ஆற்றின் வழித்தடங்களில் இருந்த மண்மேடு களைக் கரைத்து விட்டோம். பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டன. இதனால் ஊற்றுகளை வளப்படுத்தாமல் தண்ணீர் வேகமாக கடந்து சென்று விடுகிறது. நிலத்தடி நீரை வளப்படுத்தும் செயல்பாடு இல்லாமல் போய்விட்டது. அதனால், ஆற்றங்கரையோரத்தில் அமைந்த நன்செய் நிலத்தின் நீர் ஆதாரம் குறைந்து விட்டது. அதையொட்டியிருந்த கிராமங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. சோழவந்தான், தேனூர் போன்ற பகுதிகளில் பயிர் விளைச்சல் குறைந்து வரு கிறது என்று கூறினார்.
தேனூரைச் சேர்ந்த பழனிச்சாமி (72)என் பவர் கூறியதாவது: 60 ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றில் வழி நெடு கிலும் படித்துறைகள் காணப்பட்டன.
நான் சிறுவனாக இருந்தபோது அந்த படித்துறைகளில் இறங்கி குளிப்போம். ஆற்றை எளிதாகக் கடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆண்டின் பெரும் பகுதி தண்ணீர் செல்லும். கோடை காலத்தில் கூட ஊற்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். காலையிலும், மாலையிலும் மக்கள் குளிக்கச் செல்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டுவார்கள். முக்கிய பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். இப்போது அதுவெல்லாம் கனவாகிவிட்டது என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT