Published : 27 Sep 2020 10:19 AM
Last Updated : 27 Sep 2020 10:19 AM
வேளாண் மசோதாக்கள், பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சரத்குமார் இன்று (செப். 27) வெளியிட்ட அறிக்கை:
"வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 3 வேளாண் துறைசார் மசோதாக்கள் கடந்த 14-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, 15-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, 20-ம் தேதி மாநிலங்களவையில் கடும் அமளிகளுக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த 3 மசோதாக்களில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, சில பிரிவுகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம் எனத் தோன்றுகிறது.
நாட்டில் பஞ்சம் தலைத்தூக்கிய சமயத்தில் மக்களின் அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் கொண்டுவந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாகப் பட்டியல் இடப்பட்டிருந்தன.
விளைச்சல் குறைவு, பஞ்சம் தவிர பிற சமயங்களில் பொருட்களின் விலை உயராமல் இருக்கவும், பெருமளவு பதுக்கலைத் தடுக்கவும் கொண்டு வரப்பட்ட இச்சட்டம், பொருட்களைப் பெருமளவு பதுக்கினால் தண்டனை வழங்கிடவும் வழிவகுத்தது. ஆனால், தற்போது, மக்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் அவசியமான பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கியதை ஏற்க முடியவில்லை.
தேசியப் பேரிடர்கள், போர், விலைவாசி உயர்வுடன் கூடிய பஞ்சம் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்க வரம்பு விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சமயங்களில் இருப்பு வைக்க வரம்புமுறைகள் கடுமையாக விதிக்கப்படவில்லையெனில், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி பெருமளவு பதுக்கலுக்கு மீண்டும் வழிவகுக்கும் என்பதால் பொருட்களைப் பெருமளவு பதுக்கினால் உரிய தண்டனை வழங்குவதை அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா உறுதி செய்ய வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்.
APMC எனப்படும் வேளாண் சந்தை கமிட்டிகளின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவதன் மூலமாக மாநில அரசுக்கு வரக்கூடிய 0.5% - 5% வரையிலான வருவாயை இழக்கும் வாய்ப்புள்ளது. 2006 ஆம் ஆண்டு பிஹாரில் கொண்டுவரப்பட்ட மாற்று முறை தோல்வியடைந்து மண்டிமுறை ஒழிக்கப்பட்டு, குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழ் கொள்முதல் செய்யும் நடைமுறை தொடங்கியது போல, தமிழகத்தில் நடந்தேறக்கூடாது.
எனவே, தமிழக அரசு, விவசாயிகள் APMC-யில் விவசாயப் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்க கூடுதல் சலுகைகள் அறிவிக்கலாம். மேலும், மத்திய அரசு குறைந்தபட்ச கொள்முதல் ஆதாரவிலை (MSP – Minimum Support Price) கீழ் தனியார் விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதைத் தடுக்க சட்டத்திருத்தத்தில் சட்டப்பிரிவை இணைத்து, அதனை மேற்பார்வை செய்ய தனி வாரியம் அமைப்பதும் அவசியம் என எண்ணுகிறேன்.
2 ஹெக்டேருக்கும் கீழ் நிலம் வைத்து விவசாயம் பார்க்கும், சுமார் 80% சிறு, குறு விவசாயிகள் வாழும் இந்தியாவில் அவர்கள் விளைபொருட்களைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வது சாத்தியப்படாது என்பதால், அவர்கள் கிராமம் / நகரத்துக்கு அருகில் நேரடி கொள்முதல் செய்ய ஏதுவான சூழலை உருவாக்கலாம்.
ஒப்பந்த முறையைப் பொறுத்தவரை, ஒப்பந்தம் போடப்படும் நாளன்று சந்தையில் என்ன விலையோ, விளைந்து அறுவடை செய்து கொடுக்கும் பொழுதும் அதேவிலையில் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்ற முறையில் மாற்றம் தேவை.
ஒருவேளை பொருளின் விலை ஒப்பந்தத்தின்போது குறைவாகவும், அறுவடையின்போது விலை ஏற்றத்துடனும் இருந்தால் விவசாயிக்கு நஷ்டமும், ஒப்பந்தத்தின்போது விலை ஏற்றத்துடனும், அறுவடையின்போது விலை குறைவாகுமானால் விவசாயிக்கு லாபமும் கிடைக்கும். இதில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
ஒப்பந்த அடிப்படையிலான முறையில் நிலையான வருவாய் விவசாயிக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமன்றி, இயற்கை சீற்றத்தால் ஏற்படும் நஷ்டத்தை நிறுவனமே ஏற்குமாறும், தரம்பிரிப்பால் விளைபொருட்களை நிராகரிக்காதவாறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அவை நேர்மையாகச் செயல்படுகிறதா என்பதை மாநில அரசின் மூலம் உருவாக்கப்படும் Registration Authority கண்காணித்தால் சிறப்பாக இருக்கும்.
நவீன தொழில்நுட்பம், விவசாய இயந்திரங்கள் / உபகரணங்களின் உதவியுடன் விவசாயிகளின் வருவாய் பெருக்கத்திற்கான நடவடிக்கை அவசியம் என 3 வேளாண் சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் மாநிலங்கள் வாரியாக வேளாண் துறை அமைச்சர்கள், வேளாண் துறை சார் நிபுணர்கள், வேளாண் அதிகாரிகள், விவசாய சங்க / அமைப்பு பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்த பின்னர், இச்சட்டத்தில் மேலும் திருத்தம் செய்து சட்டவடிவாக்கம் கொடுப்பதைப் பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
மேலும், இனிவருங்காலங்களில், நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு முறையை ரத்து செய்து, நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதமாக அதிநவீன தொழில்நுட்ப மின்னணுக் கருவிகள் கொண்டு மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், அவற்றை நேரடியாக நாட்டு மக்களுக்கு ஒளிபரப்பு செய்து மசோதாக்கள் குறித்து அவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT