Published : 27 Sep 2020 10:12 AM
Last Updated : 27 Sep 2020 10:12 AM
மலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (செப். 27) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் மலைவாழ் மக்கள் வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும், தொழில்நுட்ப வசதியிலும், கல்வியிலும் மிகவும் பின் தங்கியுள்ளனர். அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி வாழ்வு வளம் பெறச் செய்ய வேண்டும்.
பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் பின்தங்கி இருப்பவர்களை முன்னேற்றும் விதமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவது பொன்ற நிலைகளில் அரசு பல சலுகைகளை அளித்துள்ளது. ஆனால், அவற்றைப் பெறுவதற்கு சாதிச் சான்றிதழும், வருமானச் சான்றிதழும் மிகவும் அவசியம். அதோடு, அரசு அளிக்கும் திட்டங்களைப் பெறுவதற்கும் பழங்குடி நலவாரியம் அட்டை பெறுவதற்கும் சலுகைகளைப் பெறுவதற்கும் சாதிச் சான்றிதழ் அவசியமாகிறது.
மிகவும் பின்தங்கிய மக்களாகிய மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம் கல்வியாகும். அந்தக் கல்வியைப் பெற சாதிச் சான்றிதழ் தேவை. ஒருவன் கல்வி அறிவைப் பெற்றால்; தான் தானும் தான் சார்ந்திருக்கின்ற சமுதாயமும் கிராமமும் வளர்ச்சி அடையும். தமிழக அரசு மலைவாழ் மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சலுகையைப் பெறத் தடையாக இருக்கும் சாதிச் சான்றிதழை அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும்.
பழங்குடியினர் பட்டியலில் மலைவேடன், காட்டுநாயக்கன், மலைகுறவன், கொண்டாரெட்டி குருமன்ஸ் மற்றும் பலர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி சாதிச் சான்றிதழும் வருமானச் சான்றிதழும் மலைவாழ் மக்களுக்கான அரசுத் திட்டங்களும் சலுகைகளும் தாமதமின்றிக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT