Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காணாமல் போய்விட்டது என்கிறார்கள். ஆனால், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் கடும்போட்டி. இதில், காங்கிரஸின் அகில இந்திய பொதுச்செயலாளர் திருநாவுக்கரசரும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவும் முன்னணியில் நிற்கிறார்கள்.
கடந்த காலங்களில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரன் மூன்று முறை எம்.பி. ஆனார். இந்த நிலையில், கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக ராமநாதபுரத்தில் கால்பதித்த திருநாவுக்கரசர், சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் ஓட்டுகளை வாங்கினார். அதன்பிறகு காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்ட அரசர், இப்போது மீண்டும் ராமநாதபுரத்தை குறிவைக்கிறார்.
முக்கியக் கட்சிகளான அதிமுக-வும் திமுக-வும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால், தான் சார்ந்த முக்குலத்தோர் வாக்குகள் தனக்கு ஆதரவாக விழும், அதன் மூலம் வெற்றியடையலாம் என கணக்குப் போடுகிறாராம் திருநாவுக்கரசர்.
இதற்கிடையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவரும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விசுவாசியுமான மீனவர் பிரதிநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, அறந்தாங்கி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் மீனவ சமுதாயத்தினர் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். இவர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்பது ஆம்ஸ்ட்ராங்கின் அதீத நம்பிக்கை..
இந்த இருவருக்கும் நடுவில், முன்னாள் எம்.எல்.ஏ-வான ஹசன்அலி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜே.எம்.எச். ஹசன் மவ்லானா ஆகியோரும் ராமநாதபுரத்தில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT