Last Updated : 26 Sep, 2020 05:37 PM

 

Published : 26 Sep 2020 05:37 PM
Last Updated : 26 Sep 2020 05:37 PM

"பெற்றது மட்டும்தான் நாங்கள்; பேச்சு வரவழைத்தது கோவை அரசு மருத்துவனை"- பிறவியிலேயே காது கேட்கும் திறனை இழந்த குழந்தையின் பெற்றோர் உருக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்குப் பொருத்தப்பட்ட கருவியின் செயல்பாட்டைப் பரிசோதிக்கும் பேச்சுப் பயிற்சியாளர்.

கோவை

பிறவியிலேயே காது கேட்கும் திறனை இழந்த குழந்தைக்கு, அறுவை சிகிச்சை மூலம் செயற்கை காதொலிக் கருவி பொருத்தி பேச்சுத்திறனை வரவழைத்த கோவை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிறவியிலேயே காது கேட்கும் திறன் இல்லாத குழந்தைகளுக்கு செயற்கையாக அந்தத் திறனை வரவழைக்க, கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை பிரிவில் 'காக்ளியர் இம்ப்ளாண்ட்' நவீன அறுவை சிகிச்சை கடந்த 2013-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் இதுவரை 218 குழந்தைகளுக்கு அறுவை சிசிக்சை செய்யப்பட்டு பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இதே சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட கருவியில் பழுது ஏற்பட்டாலும், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மாற்றுக்கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 32 குழந்தைகளுக்கு ரூ.35.53 லட்சம் மதிப்பில் மாற்றுக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவர் அலி சுல்தான் கூறும்போது, "பிறவியிலேயே காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவதால், பேச்சுத்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, குழந்தை பிறந்த 3 மாதத்துக்குள் கேட்கும் திறனைக் கண்டறிவது அவசியம். பிறந்த குழந்தைகளுக்குக் கேட்கும் திறன் உள்ளதா என்பதை அறிய otoacoustic emission (ஓஏஇ) கருவி மூலம் பரிசோதித்து வருகிறோம். காது கேட்காதது தெரியவந்தால், குழந்தை ஒரு வயதை எட்டியவுடன் 'காக்ளியர் இம்ப்ளாண்ட்' அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சையை 3 வயதுக்குள் செய்துகொண்டால் பேச்சுத்திறனை வரவழைப்பதில் சிரமம் ஏற்படாது. அதிகபட்சம் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

சொந்தத்தில் திருமணம் வேண்டாம்

கேட்கும் திறன் குறைபாடுடன் குழந்தை பிறக்க, நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதும் முக்கியக் காரணம். எனவே, அதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையின் முக்கிய உறுப்புகள் உருவாகும் காலமான முதல் மூன்று மாதங்களுக்குத் தேவையில்லாத மாத்திரைகளை உட்கொள்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். ஒருவேளை தேவையெனில், மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். சுயமாக மருந்து உட்கொண்டால் அது குழந்தையைப் பாதிக்கும். இதுதவிர, தாய்க்கு ஏற்படும் வைரஸ் காய்ச்சல், அம்மை போன்றவையும் குழந்தையைப் பாதிக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் தாயின் உடல்நலனில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

மருத்துவமனைக்கு நேரில் வரமுடியாத குழந்தைக்கு ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் பயிற்சி

பேச்சுப்பயிற்சி அவசியம்

அறுவை சிகிச்சை செய்து கருவியைப் பொருத்திவிட்டாலே குழந்தைக்கு கேட்கும் திறனும், பேசும் திறனும் வந்துவிடாது. இயல்பான குழந்தையின் கேட்கும் திறனும், கருவி பொருத்தப்பட்ட குழந்தையின் கேட்கும் திறனும் ஒன்றாக இருக்காது. எனவே, ஒலியை உள்வாங்கி சரியாகப் பேச, மருத்துவமனையிலேயே அமைக்கப்பட்டுள்ள செவித்திறன், பேச்சுப்பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி அளித்து வருகின்றனர்.

அவ்வாறு குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும் பேச்சுப் பயிற்சியாளர் பி.கவிதா கூறும்போது, "அறுவை சிகிச்சை செய்துகொண்டது முதல், ஓராண்டு காலம் வாரத்துக்கு மூன்று நாட்கள் தலா ஒருமணி நேரம் கட்டாயம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு மூன்று ஆண்டுகள்வரை தொடர் பேச்சுப் பயிற்சி அளிக்கிறோம். பயிற்சியின் முடிவில் யார் பேசினாலும் புரியும் அளவுக்கும், தானே தெளிவாகப் பேசும் அளவுக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கரோனா காலத்தில் நேரில் வரமுடியாத குழந்தைகளுக்கு தற்போது ஆன்லைனில் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறோம். குழந்தைகளுக்கு வீட்டிலேயே பயிற்சி அளிக்க பெற்றோருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்குகிறோம்" என்றார்.

காப்பீட்டால் கிடைத்த பயன்

அரசு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை இல்லாமல் இருந்திருந்தால் தன்
மகன் பேசாமலேயே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார் சிகிச்சையால் பயன்பெற்ற திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ரத்தினசாமி.

அவர் கூறும்போது, "என் மகனுக்கு ஒன்றரை வயதில் பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்தோம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ.8 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்றனர். பின்னர், அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்துக் கேள்விப்பட்டு அணுகினோம். இரண்டரை வயதில் இலவசமாக சிகிச்சை அளித்தனர். தங்கள் மகனைப்போல தொடர்ந்து கவனித்துக்கொண்டனர். நடப்பாண்டு 3-ம் வகுப்புச் செல்ல உள்ள எனது மகன், மற்ற குழந்தைகளைப் போலவே நன்றாகவே படிக்கிறான், பேசுகிறான். மகனைப் பெற்றது மட்டுமே நாங்கள். அவனை உருவாக்கியது கோவை அரசு மருத்துவமனை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x