Published : 26 Sep 2020 02:32 PM
Last Updated : 26 Sep 2020 02:32 PM
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து, விலைக் குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப். 26) வெளியிட்ட அறிக்கை:
"கரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதாரப் பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்குத் தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தைப் பெருக்கி, நிதிப் பற்றாக்குறையைப் போக்குவதற்குப் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.
மே 2014 இல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், டீசலில் ரூபாய் 3.56 ஆகவும் மிக மிகக் குறைவாக இருந்தன. ஆனால், தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் படிப்படியாக கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூடுதல் கலால் வரி பெட்ரோல் மீது ரூபாய் 2 உயர்த்தியதோடு, சாலை செஸ் வரி ஒரு லிட்டருக்கு ரூபாய் 8 ஆக உயர்த்தியிருக்கிறது.
மொத்தத்தில், பெட்ரோல் விற்பனை விலையில் வரியாக 69.40 சதவிகிதமும், டீசலில் 69.30 சதவிகிதமும் மத்திய, மாநில அரசுகள் வரியாக வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. சர்வதேச சந்தையில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 42 டாலராக குறைந்திருக்கிறது. இந்த விலைக் குறைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் வரிகளை விதித்து மக்கள் மீது சுமையை ஏற்றி, கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதைவிடக் கொடூரமான நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது. அதனால், பொருள்களின் விலை உயருகிறது. இதன்மூலம் இறுதியாகப் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய, சாதாரண மக்கள்தான். இதுகுறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் மத்திய பாஜக அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்புவது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு கலால் வரி விதிப்பதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இத்தகைய வரி விதிப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைப் பற்றிக் கவலைப்படாத மத்திய பாஜக அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து, விலைக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாஜக அரசை கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT