Published : 26 Sep 2020 12:02 PM
Last Updated : 26 Sep 2020 12:02 PM
ராமநாதபுரம் அருகே 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி இடிந்த நிலையில் இருந்தும் அதை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பூக் குளம், வீரம்பல், அஞ்சத்தம்பல், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட கிராமங் களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
தொடக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளி 2007-ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 160-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். உயர்நிலைப் பள்ளிக்காக கட்டிடம் கட்டாததால், கடந்த 13 ஆண்டுகளாக தொடக்கப் பள் ளிக்குச் சொந்தமான கட்டிடம், அங்கன்வாடிக் கட்டிடம், ஊராட்சி சேவைமையக் கட்டிடம் ஆகியவற்றில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இட நெருக்கடியால் மரத்தடியிலும், பள்ளி வளாகத்திலும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலை தொடர்கிறது.
மேலும் இப்பள்ளியில் குடிநீர், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனாலும், கடந்த 7 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் மரத்தடியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தபோது சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆனால்,அதிர்ஷ்ட வசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் தப்பினர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து கல்வி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதிகாரிகள் பழுதான பள்ளிக் கட்டிடங்களை அகற்றி விட்டு உயர் நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT