Published : 26 Sep 2020 11:22 AM
Last Updated : 26 Sep 2020 11:22 AM
இடைப்பருவ மாங்காய் உற்பத்தியில் கூடுதல் வருவாய்கிடைப் பதால், போச்சம்பள்ளி பகுதியில் மா உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் மாம்பழ உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மாங்கனிகள் சுவையானதாக உள்ளதால் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதுடன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. இம்மாவட்டத்தில் விளையும் தோத்தாபுரி என்ற பெங்களூரா வகை மாம்பழத்தில் இருந்தும், அல்போன்சா வகை மாம்பழத்தில் இருந்தும் மாங்கூழ் தயாரிக்கப்படுகிறது.
மா மரங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மா விவசாயிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டும், மருந்துகள் தெளித்தும் மரங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தை மாதத்தில் பூக்கள் பூக்கும். அதனை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மா சீசன் தொடங்கும். இதையடுத்து ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் நிறைவடையும்.
வறட்சி, அதிக விளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் சீசன் காலங்களில் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்கின்றனர் விவசாயிகள். மேலும், நிகழாண்டில் கரோனா ஊரடங்கால் மா விவசாயிகளுக்கு மாம்பழங்களை சந்தைப்படுத்த போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இடைப்பரு வத்தில் விளைவிக்கப்படும் மாங்காய்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் பலர் மா விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக போச்சம் பள்ளி பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘மா விளைச்சல் காலங்களில் மா மரங்களில் பூக்கள் வர விடாமல் தடுத்து, செப்டம்பர் மாதம் முதல் பூக்கள் வர ஏதுவாக மரங்களை பராமரிக்கிறோம்.
இதையடுத்து சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தேவையான உரங்கள் அளித்து மா சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. பெங்களூரா, நீலம், செந்தூரா ரக மாங்காய்களை மட்டுமே இடைப்பருவ மா உற்பத்தியில் விளைவிக்க முடியும். இடைப்பருவத்தில் விளையும் மாங்காய்கள் டன்னுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது.
சீசன் காலங்களில் இந்த ரக மாங்காய்களுக்கு டன்னுக்கு ரூ.25 ஆயிரம் கூட கிடைப்பதில்லை. இடைப் பருவத்தில் விளையும் மாங்காய்கள் சென்னைக்கும், கர்நாடக, ஆந்திர மாநிலங் களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT