Published : 26 Sep 2020 07:14 AM
Last Updated : 26 Sep 2020 07:14 AM

வேளாண் சட்டங்கள் தேச நலனுக்கும் மக்களுக்கும் எதிரானவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தாம்பரம்

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி 350 விவசாய சங்கங்களைக் கொண்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு இந்தியா முழுவதும் நேற்று மறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தின.

சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலருமான கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

விவசாயத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 3 சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

இந்தச் சட்ட மசோதாக்கள் மக்களவையில் ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்படவில்லை. விதிமுறைகளை மீறி, சர்வாதிகாரமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. விதிகள் எதையும் பின்பற்றாமல் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டங்களின்படி கார்ப்பரேட்நிறுவனங்கள் வரைமுறையின்றிவேளாண், மளிகை பொருட்களை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக்கொள்ள முடியும். செயற்கை தட்டுப்பாடுகளை உருவாக்கி, முதலாளிகள் நிர்ணயிக்கும் விலைக்கு மக்கள் வாங்க வேண்டி வரும்.

இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும், தேச நலனுக்கும் எதிரானவை. இந்தச் சட்டங்களை திரும்பப் பெறும்வரையில் போராட்டம் தொடரும்.

பண்பாடு ஆய்வு குழு

இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அந்தக் குழுவில் தமிழர்கள், தென்னிந்தியர்கள், வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மற்றும் பெண் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. இக்குழுவில் அகில உலக பிராமணச் சங்கத் தலைவர் இடம் பெற்றுள்ளார். இவர்கள் வேத நாகரிகத்தை மட்டும் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ் நாகரிகம், தென்னிந்திய நாகரிகம் அதில் இடம் பெறாது. எனவே, இந்தக் குழுவையே கலைக்க வேண்டும் என்றார்.

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.வேல்முருகன், வே.ராஜசேகரன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜா குமாரி, பா.பாலகிருஷணன், எம்.செந்தில், அனீபா உட்படபலர் பங்கேற்றனர். போராட்டத்தில்பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x