Published : 29 Sep 2015 03:52 PM
Last Updated : 29 Sep 2015 03:52 PM
பொட்டு சுரேஷ் கொலைக்கு முன்பு அட்டாக் பாண்டி சென்னையில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி ஆகியோரை சந்தித்து பேசியது தொடர்பாகவும், அப்போது அவர்களிடையே நடைபெற்ற உரையாடல்கள் குறித்தும் விசாரிக்க அட்டாக் பாண்டியை மீண்டும் காவலில் எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அட்டாக் பாண்டியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் 31.1.2013-ல் மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீடு அருகே கொல்லப்பட்டார். இந்த கொலையில் 33 மாதங்களாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி 21.9.2015-ல் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரை 23.9.15 முதல் 27.9.15 வரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, அரசியல் முன்விரோதம் காரணமாக ஆள்களை அனுப்பி பொட்டுசுரேஷை கொலை செய்ததாக அட்டாக் பாண்டி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நான்கு நாள் போலீஸ் காவல் முடிந்து அட்டாக் பாண்டியை நேற்று முன்தினம் நீதிபதி முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அட்டாக் பாண்டியை மேலும் 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
கொலைக்கு முன்பு பொட்டு சுரேஷின் நடவடிக்கையை ஆள்களை அனுப்பி அட்டாக் பாண்டி 3 மாதங்களாக கண்காணித்து வந்துள்ளார்.
முதலில் அட்டாக் பாண்டி மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தார். அவர் மதுரை வி.கே.குருசாமி, சென்னை மா.சுப்பிரமணியன் ஆகியோர் மூலம் தொடர்புகொண்டு சில கோரிக்கைகள் அடிப்படையில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அணியில் சேர்ந்துள்ளார். சென்னை தனியார் ஹோட்டலில் மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி ஆகியோரை அட்டாக் பாண்டி சந்தித்து நீண்ட நேரம் பேசி, தனக்கு வேண்டிய சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளார்.
மதுரை திமுக பிரமுகர் உதயகுமார் மூலம் தனது உறவினர் திருச்செல்வத்தை வைத்து பொட்டு சுரேஷ் தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் சென்னையில் ஒரு ஹோட்டலில் தலைமறைவாக இருந்து பொட்டு சுரேஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாகவும், கொலைக்குப் பிறகு சென்னை, பெங்களூர், மைசூர், மும்பை, டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சில வட மாநிலங்களில் தங்கியதாகவும், அப்போது தனது வங்கி கணக்கில் பல லட்சங்கள் செலுத்தப்பட்டு அந்தப் பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் எடுத்து தலைமறைவாக இருந்த காலங்களில் செலவு செய்ததாகவும் அட்டாக் பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அட்டாக் பாண்டி தெரிவித்த தகவலின் உண்மை தன்மையை அறியவும், மு.க.ஸ்டாலின் அணிக்கு செல்வதற்காக அவர்களுக்குள் நடைபெற்ற உரையாடல்கள், மு.க.அழகிரி, துரை தயாநிதியுடனான உரையாடல்கள், அவர்களிடம் அட்டாக் பாண்டி வைத்த கோரிக்கைகள், அவற்றின் உண்மை தன்மையை அறியும் பொருட்டு அட்டாக் பாண்டியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 4 நாளில் 3 நாள் அரசு விடுமுறை நாளானதால், பணப்பரிவர்த்தனை, செல்போன் தொடர்புகள் குறித்து விசாரிக்க இயலவில்லை.
எனவே, அட்டாக் பாண்டியை மேலும் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி (பொறுப்பு) ஆர்.பால்பாண்டி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2-வது முறையாக போலீஸ் காவலில் செல்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட எதிரியிடம் கேட்க வேண்டும். இதனால் அட்டாக் பாண்டியை செப். 29-ல் (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, போலீஸ் காவல் கோரும் மனு மீதான விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT