Published : 25 Sep 2015 08:49 AM
Last Updated : 25 Sep 2015 08:49 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கவுள்ள புதிய நீர்த்தேக்கமான, கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அப்பணி சில மாதங்களில் முடிவுக்கு வரும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத் துக்கு பிறகு அதன் குடிநீர் தேவை 900 மில்லியன் லிட்டராகிவிட்டது. இந்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை தேக்கி வைத்து, சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி ஒன்றி யத்தில் உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 2013-ம் ஆண்டு செப்.11-ம் தேதி தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், விவசாயிகளின் பட்டா நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, தற்போது, கால்வாய் மற்றும் கரைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ரூ.330 கோடியில், 1252.47 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்க பணி இரவு, பகலாக நடைபெறுகிறது. 7.15 கி.மீ. தூரத்துக்கு கரை அமைக்கும் பணியில், தற்போது 5 கி.மீ. தூரத்துக்கான பணி முடிவுறும் தருவாயில் உள்ளது.
விவசாய நிலங்கள் யாவும் கையகப்படுத்தப்பட்ட பிறகு, மீதமுள்ள 2.15 கி.மீ. தூர கரைகள் அமைக்கும் பணி, உபரி கால்வாய் அமைக்கும் பணி உள்ளிட்டவை துரிதமாக நடக்கும்.
அதேபோல், கிருஷ்ணா கால்வாய் ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து, 8.6 கி.மீ. நீளம் மற்றும் 6 மீட்டர் ஆழம், 10 மீட்டர் முதல் 17 மீட்டர் வரை அகலத்தில், சுமார் 232 ஏக்கர் பரப்பளவில் நீர்த்தேக்கத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கால்வாய் கரைகளில் சிமென்ட் சிலாப்புகள் மற்றும் கால்வாய்க்கிடையே பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் முடிவுக்கு வரும்.
கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கும் பணியில் தற்போது 70 சதவீதத்தை எட்டி விட்டோம். மீதமுள்ள 30 சதவீத பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரும். இந்தப் பணி முடிவுக்கு வந்த பிறகு, கண்ணன்கோட்டை, கரடிப்புத்தூர், தேர்வாய்கண்டிகை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும். ஆந்திராவின் சத்தியவேடு காட்டு பகுதிகளில் உள்ள மதனம்பேடு, பாலகிருஷ்ணாபுரம், மதனஞ்சேரி, ராஜகுண்டா ஆகிய ஓடைகள் மூலம் வரும் மழை நீரையும் இந்த நீர்த்தேக்கத்தில் முழுமையாக சேமித்து வைக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT