Published : 25 Sep 2020 07:12 PM
Last Updated : 25 Sep 2020 07:12 PM
பொதுமுடக்கம் அறிவித்து ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. நடைமுறையில், செப்டம்பர் முதல் தேதியோடு கிட்டத்தட்ட முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. நிறுவனங்கள், கடைகள், கோயில்கள் திறப்பு முதல் பொதுப் போக்குவரத்து தொடக்கம் வரையில் எல்லாவற்றுக்கும் அனுமதி கிடைத்துவிட்டது. கிட்டத்தட்ட பொது முடக்கத்திற்கு முந்தைய நிலையைப் போலவே, இன்றைய புதிய இயல்பு நிலை இருக்கிறது. பொது இடங்களில் மக்கள் நெருக்கடியும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத சூழலும் அதிகரித்திருக்கிறது.
ஆனால், அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், ஆச்சரியப்படும் வகையில் தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. கரோனாவால் இறப்போரின் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவாக இருக்கிறது. உதாரணமாக, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதியில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,967ஆக இருந்தது. இந்த மாதம் அதே தேதியில் (செப்டம்பர் 24) தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,692. ஆகஸ்ட் 24-ல் 97ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை செப்டம்பர் 24-ல் 66 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாகச் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 53,282ல் இருந்து 46,405 ஆகக் குறைந்துள்ளது.
எப்படிச் சாத்தியம்?
இது எப்படிச் சாத்தியமானது என்று அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, "கரோனா வைரஸின் வீரியம் சற்று குறைந்திருப்பதாகக் கருதுகிறோம். கூடவே, எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளவர்களை எல்லாம் ஏற்கெனவே கரோனா பாதித்துவிட்டது. கரோனா குறித்த விழிப்புணர்வு, தடுப்பு முறைகள், வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வசதி போன்ற அரசின் நடவடிக்கைகளும் இந்நோயைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது. கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவ முறையும், இயற்கை உணவும்கூடப் பயனளித்திருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோர் உயிரிழப்பு வரையில் செல்லாமல் பெரும்பாலும் காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள். இன்னொரு உண்மை என்னவென்றால், இப்போது கிராமப்புறங்களிலும் நோய் பரவிவிட்டது. எனவே, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அது பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாததால், புள்ளிவிவரங்களின் வாயிலாக மக்களைப் பயமுறுத்துகிற வேலையைச் செய்ய வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது" என்கிறார்கள்.
அரசு மருத்துவர்கள் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசத் தயங்குகிற நிலையில், கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி சில தகவல்களைச் சொல்கிறார். அவரிடம் பேசியபோது, "தமிழ்நாட்டில் நோய்த்தொற்று கொஞ்சம்கூடக் குறையவில்லை. இந்தியாவில் 10 மாநிலங்களில் பரிசோதனையை மிக மிகக் குறைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் டெஸ்ட் அதிகம் இருந்தாலும்கூட, நோய்த்தொற்றைக் குறைத்துக் காட்டுகிறார்கள். ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரைச் சார்ந்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று குறைந்தது 40 பேரையாவது பரிசோதனை செய்ய வேண்டும். இப்போது அப்படியான பரிசோதனைகள் நடைபெறுவதே இல்லை.
உதாரணமாக, என்னிடம் சிகிச்சைக்கு வந்த முரளி என்கிற 22 வயது இளைஞரை, சந்தேகத்தின் பேரில் கரோனா பரிசோதனை செய்யச் சொன்னேன். அவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவரைச் சார்ந்த யாருக்குமே அரசு சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.
இந்தியாவில் நோய்த் தொற்றாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கிராமத்தினர் என்று அரசே சொல்லியிருக்கிறது. ஆனால், பெருநகரங்களைத் தவிர வேறெங்கும் கரோனா பரிசோதனை மையங்களே நிறுவப்படவில்லை. கரோனா பரிசோதனையில் நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டிலேயே அதுதான் நிலைமை.
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள பரிசோதனை வசதியும், சிகிச்சை வசதியும் தாலுக்கா மருத்துவமனைகளில் செய்யப்படவில்லை. எனவே, கிராமப்புற மக்கள் தாங்களாகவே ஏதாவது சிகிச்சை எடுத்துக்கொண்டு, பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தற்போது வெளிவரும் கரோனா தொற்று எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் உண்மையானதல்ல. சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதையே அரசு ஏற்க மறுப்பது நியாயமானதல்ல.
அதற்காக, இதற்கு மேலும் ஊரடங்குக்கு மேல் ஊரடங்கு போட்டு மக்களை வேலைக்குச் செல்லவிடாமல் தடுக்க வேண்டும் என்று சொல்லமாட்டேன். அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் நோய்த் தொற்று மிகமிக அதிகரித்திருக்கிறது. பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் இரண்டாம் அலை தொடங்கிவிட்டது. அநேகமாக அக்டோபர் மாதத்தில் இங்கேயும் இரண்டாம் அலைத் தொற்று ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டியது நம்முடைய கடமை" என்றார்.
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, "எட்டரை கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் மொத்தத் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை எத்தனை பேர் என்று கண்டுபிடித்து வெளிப்படையாகச் சொல்லிவிட்டோம். இதில் எங்கிருந்து வந்தது சமூகப் பரவல்? ஆரம்ப காலத்தில் 100 பேரைப் பரிசோதித்தால் 10 சதவீதம் பேருக்குக் கரோனா இருக்கும். இப்போது தினமும் சுமார் 75,000 பரிசோதனைகள் செய்கிறோம். அதில், 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது தெரிகிறது.
பழைய நிலவரம் என்றால், தினமும் 7,500 நோயாளிகள் அல்லவா வர வேண்டும்? தொற்று சதவீதத்தை 2.5 சதத்திற்கும் கீழே கொண்டுவந்து விட்டோம். அப்படியானால், நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்றுதானே அர்த்தம்? எனவே, மக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்தச் சாதனையில் முதல்வர், துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் பங்குண்டு. எந்தப் பேரிடர் வந்தாலும் அரசு மக்களைக் காப்பாற்றும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT