Published : 25 Sep 2020 06:48 PM
Last Updated : 25 Sep 2020 06:48 PM
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுதிப் பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது.
இதனிடையே திடீரென்று நேற்று (செப். 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இந்நிலையில், எஸ்.பி.பி. இன்று (செப். 25) மதியம் காலமானார்.
அவருடைய மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (செப். 25), தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ - பத்ம பூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுதிப் பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்!
எல்லைகள் கடந்து ரசிகர்களுக்கு இன்னிசை தந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மத்திய - மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.
உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த எஸ்.பி.பி.க்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT