Published : 25 Sep 2020 04:56 PM
Last Updated : 25 Sep 2020 04:56 PM
பூமியில் உள்ள, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளின் 17,017 படங்களைச் சேகரித்து வட சென்னை பொன்னேரி அருகே, புதுநாப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஷர்மிளா ஆவணப்படுத்தி உள்ளார். இதற்காக 'நோபல் வோர்ல்ட் ரெகார்ட்ஸ்' என்ற அமைப்பு, ஷர்மிளாவுக்கு உலக சாதனைக்கான சான்றிதழையும் பரிசையும் வழங்கியுள்ளது.
சென்னை, மணலியைச் சேர்ந்த 23 வயது மாணவி ஷர்மிளா, மருத்துவராக ஆசைப்பட்டவர். பாட்டி இறந்ததால் 12-ம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைய, கல்லூரியில் நுண்ணுயிரியல் பாடத்தை எடுத்துப் படித்து, அதில் உலக சாதனை படைத்துள்ளார். வருங்காலத்தில் புதிய வைரஸ்களால் ஏற்படும் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பயணம் குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார் மாணவி ஷர்மிளா. ''மருத்துவர் ஆக முடியவில்லை என்றாலும் அவர்களுக்கு நோய் குறித்த தகவலை அளிக்கும் நுண்ணுயிரியலாளர் பணியை மேற்கொள்ள முடிவெடுத்தேன்.
நுண்ணுயிரியல் பிரிவிலேயே இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, அதே துறையில் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் பி.எச்டி. படித்து வருகிறேன். இளங்கலை படிக்கும்போது கல்லூரியில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மைக்ரோஸ்கோப்பைத் தருவார்கள். அதற்குள் நுண்ணுயிரிகளைப் பார்த்துவிட்டுத் திரும்பக் கொடுக்க வேண்டும். மீண்டும் மைக்ரோஸ்கோப்பைத் தொடும் தருணம் எப்போது வரும் என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பேன்.
மைக்ரோஸ்கோப் மீதான எனது ஆர்வத்தைப் பார்த்து அப்பா, எனக்குப் பிறந்த நாளின்போது மைக்ரோஸ்கோப்பைப் பரிசளித்தார். பொதுவாக மைக்ரோஸ்கோப் மூலம் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது. இதை நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என்று யோசித்தேன். கரோனா காலத்தில் கிடைத்த விடுமுறையில், கடந்த மூன்று மாதங்களாக கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகளை ஆய்வு செய்து படமாக்க ஆரம்பித்தேன்.
வீட்டின் அருகிலேயே இருக்கும் பறவைகளின் இறகுகள், வண்ணத்துப் பூச்சி, காளான், பூஞ்சை, ஒட்டுண்ணிகள், பாம்பின் தோல், தவளை, காய்கறிகள், பூக்கள், இலைகள், வேர்கள், மருத்துவத் தாவரங்கள், பல்வேறு வகையான பூச்சிகளில் இருக்கும் நுண்ணுயிரிகளை ஆய்வு செய்து, அவற்றைப் புகைப்படங்கள் எடுத்தேன். சில வகைமைகளைப் பல்வேறு கோணங்களில் படமெடுத்துள்ளேன்.
மண்ணின் வடிவம், அதில் இருக்கும் நுண்ணுயிரிகள், தண்ணீரில் இருக்கும் பாசிகள், கிருமிகள், இலைகளில் இருக்கும் ஒட்டுண்ணிகள் உட்படப் பல்வேறு இனங்களைப் பார்த்து, படமெடுத்துள்ளேன். இது உலக சாதனை என்பதைத் தாண்டி, பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகளின் அளவு மற்றும் வடிவத்தை ஆவணப்படுத்தி உள்ளேன். நுண்ணுயிரிகளின் வடிவத்தைக் கொண்டே அடுத்தகட்ட ஆய்வு மேற்கொள்ள முடியும். அவற்றுக்கான நோய் எதிர்ப்புக் கிருமிகளைக் கண்டுபிடிக்க முடியும்.
நவீன லென்ஸ்களைப் பயன்படுத்தி வைரஸ், பாக்டீரியாக்களையும் படம் எடுக்கலாம். உதாரணமாகக் கரோனா வைரஸ் அறுகோண, நீள்வட்ட வடிவில் இருப்பதைக் கண்டறிய முடியும். அதை ஆய்வு செய்து, அதன் உருமாற்றத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அதற்கான மருந்தைக் கண்டறிய முடியும்.
இயற்கையாகவே பூஞ்சைத் தொற்றுக்கு கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய நுண்ணுயிரி ஆராய்ச்சி மூலம் அவர்களைத் தொற்று ஏற்படுவதில் இருந்து காப்பாற்ற முடியும். எதிர்காலத்தில் பல புதிய வைரஸ்களால் ஏற்படும் நோய்களுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளேன்'' என்றார் ஷர்மிளா.
- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT