Published : 25 Sep 2020 02:19 PM
Last Updated : 25 Sep 2020 02:19 PM
பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு லேசான கரோனா தொற்றுதான் என்று தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை எஸ்பிபி வெளியிட்டார்.
அதற்குப் பிறகு சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது. வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது.
இதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. மேலும், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1.04 மணிக்குப் பிரிந்தது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். எஸ்பிபியின் மகன் சரணும் ட்விட்டரில் மறைவுச் செய்தியை உறுதி செய்தார்.
எஸ்.பி.பி. மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
"பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
'ஆயிரம் நிலவே வா' என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.
கரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அந்த அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது.
பரபரப்பான உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!
அவருடைய மறைவு, இசை உலகுக்குப் பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம்.
16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். கருணாநிதியின் அன்புக்குரியவர்.
இனிய பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், திமுகவின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் அவரைப் பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT