Published : 25 Sep 2020 12:56 PM
Last Updated : 25 Sep 2020 12:56 PM
விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் போக்கில் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டத்தில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் மறியல் ஈடுபட்ட 208 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்தம் பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்க விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்டங்களை கொண்டு வரும் மத்திய பாஜக அரசையும், இதனை ஆதரிக்கும் தமிழக அதிமுக அரசையும் கண்டித்து இன்று கோவில்பட்டியில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
பயணியர் விடுதி முன்பு நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜி.ராமசுப்பு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் எஸ்.சங்கிலிபாண்டி, ஒன்றிய தலைவர் சங்கர், ரெங்கசாமி, தாலுகா செயலாளர் ஏ.லெனின், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மகாலிங்கம் மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை முழங்கினர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 57 பேரை கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன், தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மறியலில் பங்கேற்ற 3 பெண்கள் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் புவிராஜ் தலைமையில் மறியலில் கலந்து கொண்ட 11 பேரும், கயத்தாறில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 11 பெண்கள் உட்பட 38 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT