Published : 10 Sep 2015 08:43 AM
Last Updated : 10 Sep 2015 08:43 AM
வண்டலூர் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட தூரத்துக்கு நடந்து சென்று ரயில்களில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பூங்காவுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளும், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களும் அவதிப்படுகின்றனர்.
ஆசியாவிலேயே அதிக இடவசதி கொண்ட வன விலங்கு பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. சென்னையில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது. இங்கு ஏராளமான அரிய வகை விலங்குகளும், பறவைகளும் இருக்கின்றன. இந்த பூங்காவை காண தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
வெளியூர்களில் இருந்து பூங்காவுக்கு வருவோர் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி பஸ் மூலம் வரவேண்டியுள்ளது. இதேபோல், சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து ரயில்கள் மூலம் வருவோர் வண்டலூர் ரயில் நிலையத்துக்கு சென்று பூங்காவுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
போக்குவரத்து வசதி
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இ.முருகன் மற்றும் சுற்றுலா பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால், போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பூங்கா அருகே ரயில்பாதை செல்வதால், இங்கு ரயில் நிலையம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே மின்சார ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் உள்ள ஓட்டேரியில் புதியதாக ரயில் நிலையம் அமைக்க அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தி ஒரு வருடம் ஆகிறது. புதிய ரயில் நிலையம் அமைக்க ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையத்துக்கும் இடையே 5 கி.மீ. தூரம் இருக்க வேண்டும். இருப்பினும் ராணுவ பாதுகாப்பு அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் அல்லது மக்களின் அத்தியாவசியமான தேவையாக இருந்தால் 5 கி.மீ. தூரத்துக்குள் இருந்தால் அமைக்கலாம். எனவே, பொதுமக்களின் நலன் கருதி அங்கு ரயில் நிலையம் அமைக்க ரயில்வே வாரியத்துக்கு மீண்டும் வலியுறுத்தவுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT