Published : 25 Sep 2020 09:56 AM
Last Updated : 25 Sep 2020 09:56 AM
பிஏபி திட்டத்தின் முக்கிய அணையான ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக நேற்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த தொடர் மழையால், ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேல் ஆழியாறு, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 20 -ம் தேதி அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியது. இதையடுத்து, கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், அணையின் 7 மதகுகள் வழியாக விநாடிக்கு3,625 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தொடர் மழை காரணமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,408 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், மேல்ஆழியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரைக் கொண்டு நவமலை நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் நேற்று மதியம் 2 மணியளவில் அணையின் நீர்வரத்து திடீரென உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.70 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. ஒரே வாரத்தில்அணை இருமுறை நிரம்பியதால்விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT