Last Updated : 25 Sep, 2020 06:58 AM

 

Published : 25 Sep 2020 06:58 AM
Last Updated : 25 Sep 2020 06:58 AM

ரூ.6.90 கோடியில் ஆறுகள், கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி மும்முரம்: அக்டோபர் 15-க்குள் பணிகளை முடிக்க திட்டம்

சென்னை

வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ரூ.6.90 கோடியில் கூவம், அடையாறு மற்றும் ஓட்டேரி நல்லா, மாம்பலம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகள், குப்பைகளை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். கடந்த 2015-ம்ஆண்டு மிக கனமழை பெய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் சில நாட்கள் மழை வெள்ளத்தில் மிதந்தன. அதையடுத்து கூவம், அடையாறு மற்றும் பிரதானகால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதுடன் தூர்வாரும் பணிகளும் நடைபெற்றன.

தற்போது விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா, மாம்பலம் உள்ளிட்ட கால்வாய்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தபோது அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக விளக்கம் அளித்தனர். வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் ஓடும் கூவம்,அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கால்வாய்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகளையும், தேங்கியுள்ள குப்பைகளையும் அகற்றாவிட்டால், மழைக்காலத்தில் வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதை மாநகராட்சிக்கு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து ஆறுகள் மற்றும் கால்வாய்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகள், குப்பைகளை அகற்றும் பணிகள்தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:

கூவம், அடையாறு மற்றும்கால்வாய்களில் ஆகாயத் தாமரைகள், குப்பைகளை அகற்றும் பணிகள் 9 பேக்கேஜ்களாக நடைபெறுகின்றன. அதற்காக ரூ.6 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 140 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறுகள், கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள், குப்பைகள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்படுகின்றன. அத்துடன் முட்டுக்காடு, அடையாறு, கூவம், எண்ணூர், பழவேற்காடு ஆகிய முகத்துவாரங்களைச் சுத்தம்செய்யும் பணியும் நடை பெறுகிறது. மேலும் காஞ்சிபுரம் நகரில் ஓடும் வேகவதி ஆற்றில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு குப்பைகள் அகற்றப்படுகின்றன.

ஓட்டேரி நல்லா, பக்கிங்ஹாம் கால்வாய், வேளச்சேரி வீராங்கால் ஓடை, மதுரப்பாக்கம் ஓடை,ஒட்டியம்பாக்கம் ஓடை, மேடவாக்கம் கால்வாய், மானாம்பதி ஓடை, நன்மங்கலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள், துரைப்பாக்கம் கால்வாய், திருநீர்மலை நாட்டுக் கால்வாய், வரதராஜபுரம் கால்வாய், ஸ்ரீபெரும்புதூர் உபரிக் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்களிலும் ஆகாயத் தாமரைகள், இடிபாடுகள், குப்பைகளை அகற்றி வருகிறோம். வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20-ம் தேதி வாக்கில் தொடங்கிவிடும் என்பதால் மேற்கண்ட பணிகளை அக்.15-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x