Published : 25 Sep 2020 06:56 AM
Last Updated : 25 Sep 2020 06:56 AM

குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்

சென்னை

வெளி மாநிலங்களில் தமிழ்வழிபள்ளிகள் மூடப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகள் குரல்கொடுப்பது வாடிக்கை. அப்பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன என்ற அடிப்படை தெரியாமல் அரசியல் செய்வதே இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தமிழ்ச் சங்கத்தால் தமிழ்வழிமேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டுவந்த அப்பள்ளி, தற்போது மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தாய்மொழியான தமிழை நேசித்தாலும், ‘தாங்கள் வசிக்கும்மாநில மொழியும், ஆங்கிலமும்தான் அங்கு முன்னேற்றத்துக்கு உதவும்’ என்று நினைக்கிறார்கள். இதனால் ‘தமிழை ஏன் படிக்க வேண்டும்?’ என்ற எண்ணமும் உருவாகியுள்ளது. அப்படியே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர நினைத்தாலும், அங்கு உள்ள அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் நிலை நாடு முழுவதும் ஒன்றுதான். அதனால், தமிழ் படிக்க தரமான பள்ளிகள் இல்லை. தமிழர்களே தமிழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது இல்லை. அகமதாபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும்தமிழர் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.

பெங்களூருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்கூறும்போது, ‘‘வாழ்வாதாரத்துக்காக பிற மொழிகளை தமிழர்கள் படிக்கலாம். தமிழுக்கு உள்ள மொழிச் சிறப்பு, உலகில் வேறு எந்தமொழிக்கும் இல்லை. அது தமிழனின் அடையாளம். தமிழ் மக்கள்இதை உணர்ந்து தமிழை எழுத,படிக்க கற்க வேண்டும்’’ என்று அறிவுரை கூறினார். இன்று பெங்களூருதமிழ்ச் சங்கமும், வேலைவாய்ப்புக்காக வேறு மொழியை கற்றாலும், தமிழர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுக் கொடுக்கிறது. அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த2 தலைமுறையாக தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்களில் கணிசமானோர் இப்போது எழுத, படிக்க கற்று வருகின்றனர்.

வெளி மாநிலங்களில் தமிழ் பள்ளிகள் மூடப்படுவது குறித்து பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் கூறியதா வது:

மாணவர் சேர்க்கை இல்லாததால், கர்நாடகாவிலும் தமிழ் வழி அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. இதையும் ஒரு தரப்பினர் சர்ச்சையாக்கினர். பெங்களூரு தமிழ்ச் சங்கம் நடத்தும் பள்ளியும் அத்தகைய சிக்கலை இப்போது சந்திக்கிறது. தமிழ் கற்றுக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகளும் தங்கள் பள்ளிகளில் அதே காரணங்களுக்காக தமிழ் வகுப்புகளை நீக்கிவிட்டன. இத்தனைக்கும் பெங்களூருவில் தமிழர்கள் 30 சதவீதம் பேர் வசிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதி முழுவதும் தமிழர்கள்தான். தமிழகம் போலவே உணர வைக்கக்கூடிய அப்பகுதியில்கூட தமிழ் வழிப் பள்ளிகள், மாணவர் சேர்க்கை குறைந்ததால் மூடப்பட்டன.

கர்நாடக அரசுக்கு யாரும் தமிழ்படிக்கக் கூடாது என்ற நோக்கம் இல்லை. போதிய அளவு மாணவர்கள் இருந்தால் தமிழ்வழிப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த கர்நாடக அரசு தயாராகவே உள்ளது. சொல்லப்போனால், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள சில கன்னட வழி அரசுப் பள்ளிகள்கூட மூடப்பட்டன.

கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று இருக்கிறது. தமிழ் கற்கவும், தங்கள்குழந்தைகளை தமிழ்வழியில்படிக்க வைக்கவும் விரும்புகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் சுமாராக இருப்பதால், அதில்பிள்ளைகளை சேர்க்க விரும்புவது இல்லை. தரமான தனியார் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி இல்லை. அதனால் கிடைத்த மொழியில் படிக்கின்றனர். தனியாருக்கு நிகரான கல்வித் தரம் அரசுப் பள்ளிகளில் கிடைத்தால், நிச்சயம் அவர்களது முதல் தேர்வு தமிழ் வழி கல்வியாகவே இருக்கும்.

எனவே, பிற மாநிலங்களில் தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு, அப்பள்ளிகளின் குறைவான தரமும், அதன் காரணமாக மாணவர் எண்ணிக்கை குறைவதுமே காரணம். இதை சரிசெய்யாமல், தமிழக அரசு அல்லது பிற மாநில அரசுகளுக்கு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் தீர்வு கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x