Published : 24 Sep 2020 06:16 PM
Last Updated : 24 Sep 2020 06:16 PM
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் வசதியை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன நீராவி இயந்திரத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு நவீன நீராவி சலவை இயந்திரத்தை திறந்து வைத்தார். மேலும், கரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பும் வசதியையும் அவர் தொடங்கி வைத்தார்.
மருத்துவ சுகாதார பணியாளர்கள் 170 பேருக்கு சிறப்பு சீருடைகளை வழங்கிய அமைச்சர், சிறப்பாக பணியாற்றிய மருத்துவ ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:
கரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூட தமிழக முதல்வரை பாராட்டியுள்ளார். மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ்வதாக பிரதமர் பாராட்டியிருப்பதன் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.
பிரதமருடனான ஆய்வுக் கூட்டம் காரணமாக தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடைபெறுவதாக இருந்த முதல்வரின் ஆய்வுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது அக்டோபர் 1 அல்லது 3-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி தூத்துக்குடி வருவார். அன்றைய தினம் பல்வேறு திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைப்பார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1,55,143 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் மொத்தம் 1,212 படுக்கைகள் உள்ளன. இதில் 700 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 171 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள். 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 82 வெண்டிலேட்டர் வசதி கொண்டவை. 63 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி வசதி கொண்டவை ஆகும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை காரணமாகவே தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா இறப்பு விகிதம் தமிழகத்திலேயே குறைவாக 0.67 சதவீதமாக உள்ளது என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டநத்தம், இடைசெவல் துணை ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளுக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.
எதிரி கட்சித் தலைவர்:
தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பிரதமர் நரேந்திர மோடி தமிழக அரசை பாராட்டியதையே எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறை கூறியுள்ளார். அவர் எதிர்கட்சித் தலைவர் அல்ல. எதிரி கட்சித் தலைவர். எதிர்கட்சித் தலைவர் என்றால் நல்லதைப் பாராட்ட வேண்டும். குறைகள் இருந்தால் சுட்டிக் காட்ட வேண்டும். அதைவிடுத்து ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறை கூறி வருகிறார். தமிழக அரசை பாராட்ட வேண்டிய அவசியம் பிரதமருக்கு இல்லை. ஆனால் இருக்கின்ற நிலையை பார்த்து, அரசின் செயல்பாட்டை பார்த்து பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு தமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும் தான். குறிப்பாக எதிர்கட்சித் தலைவருக்கும் சேர்த்து தான். இதனால் அவர் பெருமைப்பட வேண்டும். அதைவிடுத்து குறை கூறுகிறார் என்றால், இதிலும் அவர் அரசியல் செய்கிறார் என்பது பகிரங்கமாக தெரியவருகிறது என்றார் அமைச்சர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT