Published : 24 Sep 2020 05:29 PM
Last Updated : 24 Sep 2020 05:29 PM
மதுரையில் அழகுமுத்துகோன் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் கபடி வீரன் சிலை அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதித்துள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்த மணிவண்ணன் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலை அமைக்க 2014-ல் 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி செல்லூர் தத்தனேரி பாலம் இறங்கும் இடத்தில் அழகுமுத்துக்கோன் சிலை அமைக்க அனுமதி பெறப்பட்டது. சிலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை காரணம் கூறி 2016-ல் அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது அதே இடத்தில் கபடி வீரரின் சிலை அமைக்க அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கல் நாட்டியுள்ளார். போக்குவரத்து நெரிசலைக் காரணமாகக் கூறி அழகுமுத்துக்கோன் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட அதே இடத்தில் கபடி வீரர் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது சட்டவிரோதம்.
எனவே, செல்லூர் தத்தனேரி பாலம் இறங்கும் இடத்தில் கபடி வீரன் சிலை வைக்க தடை விதித்து, அதே இடத்தில் அழகுமுத்துக்கோன் முழு உருவ சிலையை நிறுவ அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று, விசாரணைக்கு வந்தது. செல்லூர் பாலம் இறக்கும் பகுதியில் சாதி, அரசியல் தலைவரின் சிலை நிறுவப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியும், அங்கு என்ன சிலை நிறுவப்படவுள்ளது என்பது குறித்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு , விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பின்னர், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரையில் பல இடங்களில் புராதான சின்னங்களின் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதன் ஒரு பகதியாக செல்லூரில் கபடி வீரன் சிலை அமைக்கப்படுகிறது என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசியல் தலைவர்கள், ஜாதி தலைவர்களின் சிலைகளை வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். கபடி வீரன் சிலை வைத்தால் அதுபோன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. எனவே கபடி வீரன் சிலை அமைக்கலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT