Published : 24 Sep 2020 04:12 PM
Last Updated : 24 Sep 2020 04:12 PM
தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதுச்சேரியில் 74 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கெனவே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகள் வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்திருந்த சூழலில், தற்போது அவரின் தந்தை வீட்டில் இச்சோதனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்றதாக கைது செய்யப்பட்டவர் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு சிலை கடத்தலுக்கு பலர் உதவியது தெரியவந்தது. மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தப்பட்ட சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டன.
அப்போது கிடைத்த தகவலின்படி சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப் போலீஸ் படையினர் புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள வீட்டில் 2016-ம் ஆண்டு அக்டோபரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான 11 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 50 கோடி என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, கோலாஸ் நகரில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் மரியா (39) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த ஐம்பொன் சிலைகள் எங்களின் பரம்பரை சொத்து என்று போலீஸாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.
இந்த நிலையில், சுமார் 4 வருடம் கழித்து, புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ரோமண் ரோலண்ட் வீதியில் மரியாவின் தந்தை ராஜரத்தினம் வீட்டில் ஐம்பொன் சிலைகள் இருக்கிறதா என்பது குறித்து தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீஸார் இன்று (செப். 24) சோதனை நடத்தினர். எஸ்.பி. சக்திவேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை தொடங்கி மதியம் வரை சோதனை நடைபெற்றது. இதுபற்றி தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி. சக்திவேல் கூறுகையில், "மொத்தமாக 74 சிலைகளை பறிமுதல் செய்துள்ளோம். பழமையான ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் புதுச்சேரியில் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ஆய்வு செய்து எடுத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT