Last Updated : 24 Sep, 2020 04:06 PM

 

Published : 24 Sep 2020 04:06 PM
Last Updated : 24 Sep 2020 04:06 PM

கன்னிப்பூ அறுவடை நேரத்தில் இழப்பை சந்தித்தாலும் கும்பப்பூ சாகுபடி பணிகளைத் தொடங்கிய குமரி விவசாயிகள்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி அறுவடை நேரத்தில் மழையால் இழப்பை சந்தித்த விவசாயிகள் தேற்றிகொண்டு, வழக்கம்போல் பிரதிபலனை பாராமல் கும்பப்பூ சாகுபடி பணிகளை தொடங்கினர்.

குமரி மாவட்டத்தில் நகர, கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறியபோதும், 6500 ஹெக்டேர் வயல்களில் தற்போதும் நெற்பயிர் சாகுபடி நடந்து வருகிறது.

கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய ஆண்டின் இருபோக சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இயற்கையின் சீற்றத்தால் இழப்புகளை சந்திப்பதால் மனவேதனையடையும் விவசாயிகள், சில நாட்களிலே தேற்றிகொண்டு மீண்டும் நெற்பயிர் சாகுபடிகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. தன்னம்பிக்கை மிகுந்த விவசாயிகள் குமரி மாவட்டத்தில் இன்றும் நூற்றுக்கணக்கானோர் இருப்பதை இது காட்டுகிறது.

கன்னிப்பூவில் நல்ல மகசூல் கிடைத்தபோது மகிழ்ந்திருந்த விவசாயிகள் கடந்த மாத இறுதியில் இருந்தே அறுவடைக்கு தயாரான போது கனமழை பருவம் தொடங்கியது.

தொடர்ச்சியாக பெய்த மழையில் சிரமத்திற்கு மத்தியில் 30 சதவீத நெற்பயிர்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளன. 2500 ஹெக்டேருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நெல்மணிகள் சகதியுடன் கலந்து கிடக்கிறது.

நெல்லிற்கு நல்ல விலை உள்ள நேரத்தில் போதிய மகசூலும் கிடைத்த நிலையில் நெற்பயிர்களை அறுவடை செய்து கரைசேர்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் விவசாயிகள் மத்தியில் காணப்படுகிறது. விவசாயத்திற்கு செலவு செய்த பணத்தையாவது ஈடுகட்ட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. இவற்றிற்கு மத்தியில் குமரி மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்திலும் கெடுபிடி காட்டாமல் கொள்முதல் செய்வது விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் இழப்பை தேற்றிகொண்ட விவசாயிகள் அடுத்த கும்பப்பூ சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். தெரிசனங்கோப்பு, தெள்ளாந்தி, பறக்கை, பூதப்பாண்டி, கல்படி போன்ற பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் முடிந்து அடுத்த கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால் பாவி நிலத்தை உழுது பண்படுத்தி வருகின்றனர். 125 நாளில் இருந்து 130 நாளுக்குள் அறுவடை பருவத்த எட்டும் பொன்மணி திருப்பதிசாரம் 3, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்களுக்கான நாற்றங்கால் பாவப்பட்டுள்ளது.

இறச்சகுளம், திருப்பதிசாரம், தோவாளை, புத்தனாறு ஆகிய பகுதிகள் உட்பட 2000 ஹெக்டேருக்கு மேல் உள்ள வயல்களில் நெல் அறுவடை ஆகாமல் உள்ளது. தற்போது மழை நின்றுள்ளதால் அறுவடை பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளது. அஞ்சுகிராமம் உட்பட கடைமடை பகுதிகளில் நெல்கள் விளைச்சல் பெறாததால் அடுத்த மாதம் அறுவடை செய்ய முடிவு செய்துள்ளனர்.

கும்பப்பூ சாகுபடி பணிகள் குறித்து விவசாயி செண்பகசேகர பிள்ளை கூறுகையில்; எப்போதுமே கன்னிப்பூ சாகுபடி நெற்பயிர்கள் அறுவடை பருவத்தில் மழையால் பாதிப்பை ஏற்படுத்துவது உண்டு.

இதனால் பழகிப்போன விவசாயிகள் சில நாட்கள் கவலையில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர். பின்னர் தேற்றிகொண்டு மீண்டும் வேளாண் பணிகளை தொடங்குவர். இது ஒரு தொடர்கதை போல் நடந்து வருகிறது. இதனால் தான் நாஞ்சில் நாட்டில் நெல் விவசாயம் இன்றும் தளைத்து நிற்கிறது.

தற்போது மழையில் சேதமான நெற்பயிர்களை அறுப்பதற்கு அறுவடை இயந்திரத்திற்கு நேரம் அதிகமாக ஆகிறது. மழையுடன் சேற்றில் புதைந்து கிடக்கும் நெல்மணிகளை கிளறி அறுவடை செய்வதற்கு ஒரு மடங்கு நேரம் வரை கூடுதல் ஆகிறது. வழக்கமாக ஒரு மணி நேரத்தில் அறுக்கும் வயல்களில் 2 மணி நேரத்திற்கு மேல் அறுவடை செய்யவேண்டும். இதனால் அறுவடை இயந்திரத்திற்கான கூலியும் கூடுதலாக வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் உளளது. மழையில் சிக்கிய நெல்மணிகளில் 10 சதவீதம் வரை முளைத்துள்ளன. மீதமுள்ளவற்றை அறுவடை செய்தாலும் வைக்கோலுடன் நெல்மணிகள் போய் வீணாகிறது. எனவே இதுபோன்ற மழைக்காலத்தில் சேதமான நெல்மணிகளை கொள்முதல் செய்வதில் அரசு தளர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x