Published : 24 Sep 2020 11:07 AM
Last Updated : 24 Sep 2020 11:07 AM
விஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி தென்பட்டதாகவும், தற்போது அவர் பூரண உடல் நலத்துடன் உள்ளதாகவும் தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தேமுதிக தலைமைக் கழகம் இன்று (செப். 24) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார்"
இவ்வாறு தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் விழைகிறேன்!
ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர், தெலங்கானா
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பி மக்கள் சேவையாற்ற வேண்டுமென எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT