Published : 23 Sep 2020 08:13 PM
Last Updated : 23 Sep 2020 08:13 PM
வடமாநிலங்களில் தற்போது தொடர் திருவிழாக்கள் நடக்கத் தொடங்கியுள்ளதால் சோழவந்தான், நாடிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையோரங்களில் உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு உள்ளூர் சந்தைகள் முதல் வெளியூர் சந்தைகள் வரை நல்ல வரவேற்பு உண்டு.
மாவட்டத்தில் சோழவந்தான் தவிர, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
வியாபாரிகள், விவசாயிகளிடம் மொத்தமாக கொள்முதல் செய்து வடமாநிலங்களுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வார்கள். மற்ற விவசாயிகள் 50-க்கும் மேற்பட்ட தேங்காய் கமிஷன் கடைகளில் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வாரந்தாறும் புதன்கிழமைகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய்கள் நேரடியாக ஏலம் விடப்படுகிறது.
இதில், விவசாயிகளுக்கு இடைத்தரர்கள் இல்லாமல் அவர்கள் உற்பத்தி செய்யும் தேங்காய்களுக்கு நியாயமான விலை கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்னர்.
இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இதில், 4 விவசாயிகளின் உற்பத்தி செய்த 11,305 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.
மதுரை விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இந்த ஏலத்தில் விவசாயிகளுக்கு நல்ல விலையில் ஏலம்விடப்பட்டது.
இதுகுறித்து வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் கூறியதாவது:
வட இந்தியாவில் வரும் நாட்களில் திருவிழா தொடர்ந்து நடக்கும் காலமென்பதால் தேங்காய்கள் அதிகத் தேவைப்படுகிறது. அதனால், நேற்று நடந்த இந்த ஏலத்தில் 19 வியாபாரிகள் பங்கு பெற்றனர்.
இதனால் என்றுமே இல்லாத வேலைக்கு வியாபாரிகள் உச்சபட்ச விலையில் ஏலம் எடுத்தனர். 6,035 தேங்காய்கள் கொண்ட குவியல் 15.10 ரூபாய்க்கும், 1380 கொண்ட குவியல் 14.10 ரூபாய்க்கும், 2060 கொண்ட குவியல் ரூபாய் 14.10 க்கும், 1830 கொண்ட குவியல் ரூபாய் 12.50 க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT