Published : 23 Sep 2020 06:56 PM
Last Updated : 23 Sep 2020 06:56 PM
வயிற்றில் இருந்த 5 மாதக் கரு பாதிக்கப்படாமல் லேப்ரோஸ்கோப்பி மூலம் கர்ப்பிணியின் பித்தப்பையை கோவை அரசு மருத்துவனை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். இத்தகைய அரிதான சிகிச்சையை இங்கு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
திருப்பூரைச் சேர்ந்த 29 வயதுடைய 5 மாதக் கர்ப்பிணி ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 7-ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு ஸ்கேன் மற்றும் எம்ஆர்சிபி பரிசோதனை மேற்கொண்டதில் பித்தப்பையில் கல் இருப்பதும், அதனால் பித்தப்பை வீக்கம் அடைந்துள்ளதும் கண்டறியப்பட்டது.
உடனடியாக இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை செய்து, லேப்ரோஸ்கோப்பி மூலம் பித்தப்பை அகற்றப்பட்டது. எந்தவிதத்திலும் கரு பாதிக்கப்படாமல் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனையின் டீன் காளிதாஸ் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் பித்தப்பை பிரச்சினை ஏற்பட்டால் அது பல வடிவங்களில் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. இதனால், பித்தப்பை சீழ் பிடித்தல், பித்தப்பை வெடித்துப் போதல், மஞ்சள் காமாலை, கணைய வீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
சிகிச்சை பெற சரியான காலம்
இதுபோன்று பித்தப்பை கல் பிரச்சினை உள்ள கர்ப்பிணிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் அதிகம். எனவே, கரு வளர்ச்சியின் இரண்டாம் பருவமான 3 முதல் 6 மாத காலத்துக்குள் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானலும் வலி, காய்ச்சல், வாந்தி, கணையப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் தாய், சேய் இருவருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, கர்ப்பிணிகள் சரியான காலத்தில் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிறு தழும்பு மட்டுமே இருக்கும்
லேப்ரோஸ்கோப்பி சிகிச்சையில் சிறிய அளவிலான தழும்பு மட்டுமே இருக்கும். சிகிச்சை முடிந்த நான்கு நாட்களில் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம். கோவை அரசு மருத்துவமனையில் இவ்வாறு கர்ப்ப காலத்தில் பித்தப் பை நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்த அறுவை சிகிச்சையை குடல், பித்தப்பை, கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் துரைராஜ், செந்தில்பிரபு, மகளிர், மகப்பேறு மருத்துத்துறை தலைவர் மனோன்மணி தலைமையிலான மருத்துவக்குழு, மயக்கவியல் துறை தலைவர் ஜெய்சங்கர் நாராயணன், மருத்துவர் சத்யா உள்ளிட்டோர் சிறப்பான முறையில் செய்து முடித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT