Published : 23 Sep 2020 05:07 PM
Last Updated : 23 Sep 2020 05:07 PM
சட்டப்பேரவை திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாமல் நிராகரித்த கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கரூர் மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உபகரணங்கள் வாங்க தனது தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடியே, மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்க மாவட்ட ஆட்சியருக்கு, திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பரிந்துரை செய்தார். அந்த நிதிப் பரிந்துரையை ரத்து செய்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், அவரது தொகுதி நிதியைப் பயன்படுத்தாதது ஏன் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (செப். 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி நிதியை அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மற்ற தொகுதிக்குப் பயன்படுத்த முடியாது என்றும் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகையை முதல்வர் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
அப்போத, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதனால் நிதி பயன்படுத்தப்படவில்லையா என்று கண்டனம் தெரிவித்தனர்.
கரோனா சூழலில், செந்தில் பாலாஜியின் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்து, பயன்படுத்தாமல் அதை நிராகரித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT