Published : 23 Sep 2020 04:50 PM
Last Updated : 23 Sep 2020 04:50 PM
தமிழக முதல்வரை விமர்சித்துள்ளதால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக அதிமுகவினர் கடும் விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அப்போது, "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு விவசாயி என்று குறிப்பிடுகிறார். ஆனால், விவசாயிகளின் கஷ்டம் அவருக்குத் தெரியவில்லை" என விமர்சித்திருந்தார்.
தமிழக முதல்வர் மீதான விமர்சனத்துக்கு புதுச்சேரி அதிமுகவினர் கடும் விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.
முதல்வரின் போராட்டத்துக்குத் தடை விதிக்க மத்திய உள்துறை, துணைநிலை ஆளுநருக்கு விரைவில் கடிதம் - புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர்
இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ இன்று (செப்.23) வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழக முதல்வரைப் பற்றிக் குறை கூற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. முதல்வரின் போராட்ட அறிவிப்பு என்பது சட்டப்படி குற்றச் செயலாகும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர், ஆளும் கட்சியினரால் நடத்தப்பட இருக்கும் போராட்டத்திற்கு இயற்கை பேரழிவு மேலாண்மைச் சட்டம், தொற்று நோய்கள் சட்டம் (1897) ஆகியவற்றின்படி தடை விதிக்க வேண்டும். மீறிப் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்.
இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு அதிமுக சார்பில் கடிதமும் அனுப்பப்படும். இவ்விஷயத்தில் துணைநிலை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுகவைத் திருப்திப்படுத்தவே விமர்சனம் - அதிமுக கொறடா எதிர்ப்பு
புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் இன்று வெளியிட்ட அறிக்கை:
"முதல்வர் நாராயணசாமிக்கு புதுச்சேரி விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறையில்லை. குறைந்தபட்சம் தமிழக அரசு போல காவிரி கடைமடைப் பகுதியான காரைக்காலைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நாங்கள் வலியுறுத்திய கோரிக்கையைக்கூட நிறைவேற்ற துணிவில்லாத நாராயணசாமி, புதுச்சேரியில் விவசாயிகள் நலனுக்காக ஒரு திட்டத்தைக்கூட செயல்படுத்தவில்லை.
விவசாயிகளைப் பற்றியோ, விவசாயத்தைப் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாத நாராயணசாமிக்கு தமிழக அரசைப் பற்றியோ, தமிழக முதல்வரைப் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது.
குறுக்கு வழியில் பதவிக்கு வந்துவிட்டு, தனது முதல்வர் பதவிக்காக, புதுச்சேரி மாநில திமுகவிடம் காங்கிரஸை நாராயணசாமி அடகு வைத்துவிட்டார். திமுக தலைவரைக் குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக, வாய்க்கு வந்தபடி நாராயணசாமி பேசியுள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்"
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், அம்மா பேரவை முன்னாள் செயலாளருமான ஓம்சக்தி சேகர் வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகள் பற்றி தமிழக முதல்வருக்கு ஏதும் தெரியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விவரம் புரியாமல் பேசியுள்ளார். கரோனா காலத்தில் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5,000 செலுத்துவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துவிட்டு ஒருவருக்குக் கூட செலுத்தவில்லை. கூட்டுறவு வங்கிக் கடனை கூட ரத்து செய்யவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினைத் திருப்திப்படுத்த இதுபோல் பேசுவதை நாராயணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT