Published : 23 Sep 2020 03:49 PM
Last Updated : 23 Sep 2020 03:49 PM
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மாட்டு வண்டியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு, மாநில பொதுச்செயலாளர் பி.பரமேஸ்வரன், மாநில ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி மற்றும் பலர் மாட்டு வண்டியில் அமர்ந்து வந்தனர்.
அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச்சட்டத்தைத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு வழங்கினர். தொடர்ந்து மாநில தலைவர் ரெங்கநாயகலு கூறுகையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம்.
விவசாய விளை பொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் ஆகிய 3 சட்டங்கள் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், இந்திய வியாபாரிகளுக்கும் எதிரானதாகும்.
இந்த சட்டப்பிரிவுகளில் இந்திய விவசாயிகளுக்கும், வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கும் நேரடியாக ஒப்பந்தத்தில் ஈடுபட வகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வெளிநாட்டு கம்பெனிகள் வழங்கும், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கும் நிலை ஏற்படலாம்.
இதனால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் நிவாரணம் பெறும் வகைக்கும், தீர்வு காணும் வகைக்கும் சட்ட ஷரத்தில் பாதுகாப்பு தன்மை இல்லை.
மேலும், குறைந்தபட்ச விலை கிடைக்கப் பெறாமல் விவசாயிகள் தவிக்கக்கூடிய நிலை ஏற்படும். அத்துடன், வெளிநாட்டு நிறுவனங்களிடம் கடன் பட்டு, விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கபளீகரம் செய்யக்கூடிய சூழல் எழுந்துள்ளது.
அதே போல், அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல், கோதுமை போன்றவை கொள்முதல் செய்ய முடியாமல், ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்படும்.
இந்தச் சட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வெளிநாடுகளுக்கு விளை பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அரசின் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும், உணவு பொருட்களின் விலை உயர்வு வாய்ப்புள்ளது.
எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாய சங்கங்களின் கருத்து அறிந்து சட்டத்தில் மாற்றங்களை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT