Published : 23 Sep 2020 01:22 PM
Last Updated : 23 Sep 2020 01:22 PM

கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழக நிபுணர்கள் புறக்கணிப்பு; தமிழக அறிஞர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

மத்திய அரசின் கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற வேண்டும் என, பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு இன்று (செப். 23) முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதம்:

"கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி மற்றும் உலகின் பிற கலாச்சாரங்களுடன் அதன் தொடர்புகள் குறித்து முழுமையான ஆய்வை நடத்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நிபுணர் குழுவை அமைத்துள்ளது. நம் நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார வேரினை அறிவதில் நம்முடைய புரிதலை இது ஆழப்படுத்தும் என்பதில் இக்குழுவை நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், இக்குழுவின் அமைப்பு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் குழுவில் தென்மாநிலங்களிலிருந்து குறிப்பாக, பழமையான மற்றும் புகழ்பெற்ற திராவிட நாகரிகத்தைக் கொண்டுள்ள தமிழகத்தில் இருந்து பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை. சமீபத்தில் கீழடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வு, கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது சங்க காலம் என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், தமிழ்க் கலாச்சாரம் மற்றும் மொழி, உலகிலேயே பழமையான வாழும் பாரம்பரியம் என்பதை அறியலாம்.

பிரதமர் மோடி: கோப்புப்படம்

கடந்த ஆண்டு இந்த நேரத்தில் நீங்கள் மகாபலிபுரத்தைப் பார்வையிட்டீர்கள். அங்கு பிரம்மிக்க வைக்கும் காலம் கடந்த நினைவுச்சின்னங்கள் மற்றும் தமிழ்ப் பாரம்பரியத்தின் புகழ்பெற்ற மரபு ஆகியவற்றை நீங்கள் முழுமையாகக் கவனித்தீர்கள். இதனை நீங்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். ஆகையால், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் எந்தவொன்றும் தமிழ்க் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு சரியான இடத்தை வழங்காமல் முழுமையடையாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

இதனடிப்படையில், கலாச்சாரத்துறை அமைச்சகம், நிபுணர் குழுவை அமைக்கும்போது தமிழக நிபுணர்களைப் புறக்கணித்தது ஆச்சரியமளிக்கிறது. எனவே, நீங்கள் தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டு, தமிழகத்தின் சிறந்த அறிஞர்களை ஆணையத்தில் இடம்பெறச் செய்ய கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என, தமிழ்நாட்டு மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x