Published : 23 Sep 2020 10:32 AM
Last Updated : 23 Sep 2020 10:32 AM
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 55 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 40 மி.மீ., கருப்பாநதி அணையில் 30 மி.மீ., ராமநதி அணையில் 20 மி.மீ., செங்கோட்டையில் 19 மி.மீ., தென்காசியில் 18.80 மி.மீ., கடனா நதி அணையில் 16 மி.மீ., ஆய்க்குடியில் 3.60 மி.மீ., சிவகிரியில் 3 மி.மீ. மழை பதிவானது.
அணைகள் நிலவரம்
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 78.50 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 365 கனஅடி நீர் வந்தது. 60 கனஅடி நீர் வெளியேற்றப் பட்டது.
84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நிரம்பியது. பாதுகாப்பு கருதி இந்த அணையில் நீர்மட்டம் 82 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணையும் நிரம்பியது. நீர்மட்டம் 70.21 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் கடனாநதி அணை தவிர மற்ற 4 அணைகளும் நிரம்பியுள்ளன.
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அருவிகளில் குளிக்க தடை நீடிப்பதால், இந்த ஆண்டில் குற்றாலம் சாரல் சீஸனை அனுபவிக்க முடியாத ஏக்கத்தில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
ஆறுகளில் குளிக்க வேண்டாம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் அணைகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் அணைகளிலோ, அணைகளின் மறுகால் பகுதிகளிலோ குளிப்பதற்கு செல்ல வேண்டாம். மேலும் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடுவது குற்றம். எனவே அணைகள், ஆறு, குளம், தனியார் தோட்டங்களில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
காய்ச்சல் அறிகுறி
பருவமழை காலத்தில் பொது மக்கள் உயிருக்கோ, உடமைக்கோ சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் வீட்டின் கூரைகள், சன்ஷேடுகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் வெளிப்புறம் தேவையற்ற டப்பாக்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கவர்கள் இருப்பின் அவற்றில் நீர் தேங்கி கொசுப்புழு வளர வாய்ப்பு உள்ளது. அவற்றை உடனே அகற்ற வேண்டும்.
காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். தினமும் உப்பு கலந்த சுடுநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். பருவமழை காலத்தில் ஏற்படும் டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் கரோனா ஆகிய அனைத்து நோய்களுக்கும் காய்ச்சல் ஒரு பொதுவான அறிகுறியாக இருப்பதால், காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு பொது சுகாதார மையத்துக்கோ, அரசு மருத்துவ மனைக்கோ சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடிக்கும் மழையால் திருநெல்வேலி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்றுமுன்தினம் 85.30 அடியாக இருந்தது.
நேற்று காலையில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 88.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,383 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,270 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 65.70 அடியிலிருந்து 65.90 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு விநாடிக்கு 812 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 680 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும், சேர்வலாறு நீர்மட்டம் 101.18 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 8.85 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 32 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 31 , சேர்வலாறு- 12, மணிமுத்தாறு- 5.6, கொடுமுடியாறு- 25, அம்பாசமுத்திரம்- 1, ராதாபுரம்- 19.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT