Published : 23 Sep 2020 10:22 AM
Last Updated : 23 Sep 2020 10:22 AM

காவல் துறை அதிகாரிகளின் பெயரில் முகநூல்: நண்பர்களிடம் பணம் பறிக்க முயற்சி

டிஎஸ்பி செந்தில்குமார்

திருச்சி

டிஎஸ்பி உள்ளிட்ட காவல் அதிகாரி களின் பெயரில், அவர்களது புகைப்படத்தை பயன்படுத்தி போலியாக தொடங்கப்பட்ட முக நூல் கணக்கு வாயிலாக பணம் பறிக்க முயன்ற மர்ம கும்பல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை நகர டிஎஸ்பியாக பணிபுரிபவர் செந்தில்குமார். ஏற்கெனவே முசிறி, பொன்னமராவதி உள்ளிட்ட இடங் களில் டிஎஸ்பியாக பணிபுரிந்த இவர், தனது முகநூல் கணக்கில் 900 பேர் வரை நண்பர்களாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவரது புகைப்படத்தையும், பெயரையும் பயன்படுத்தி தொடங் கப்பட்ட மற்றொரு முகநூல் கணக்கில் இருந்து நேற்று முன் தினம் பலருக்கு நட்பு அழைப்பு வந்தது.

அதை ஏற்றுக்கொண்ட பலருக்கு, அடுத்த சில நிமிடங்களில் மெசஞ்சர் வழியாக தனக்கு அவசரமாக ரூ.30 ஆயிரம் தேவைப்படுவதாகவும், அந்த பணத்தை உடனடியாக 82609 89683 என்ற எண்ணுடைய கூகுள் பே அக்கவுண்டில் செலுத்துமாறும் டிஎஸ்பி செந்தில்குமார் கேட்பதுபோல தகவல் அனுப்பப்பட்டது. இந்த தகவலைக் கண்ட சிலர், டிஎஸ்பி செந்தில்குமாரை தொடர்புகொண்டு கேட்டனர். அப்போதுதான் தன் புகைப்படம், பெயரைப் பயன்படுத்தி யாரோ போலியாக முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சிப்பது செந்தில்குமாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, தன் பெயரில் சிலர் பணம் பறிக்க முயற்சி செய்வ தாகவும், யாரும் ஏமாற வேண்டாம் எனவும் முகநூலில் பதிவு செய்தார். மேலும், இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலீஸிலும் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து டிஎஸ்பி செந்தில்குமாரின் போலியான முகநூல் கணக்கு முடக்கப்பட்டது.

பின்னர் போலியான முகநூல் கணக்கைத் தொடங்கிய நபர் குறித்து போலீஸார் விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அவர்களைக் கண்டறியும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, திருச்சியிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முதலணியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ரவிக்குமார் என்பவரின் பெயரிலும் மர்ம நபர்கள் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி, அவரது நண்பர்களிடம் இதேபோன்று பணம் பறிக்க முயன்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறியபோது, “சமூக வலைதளங்களில் விடுக்கப்படும் நட்பு அழைப்பை ஏற்பது, பணம் கொடுப்பது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவது என எதுவாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x